உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாகத்தான் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், நாகர்கோவில் அருகே பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்த மத்திய இணை அமைச்சர் என் முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது, சமையல் எரிவாயு விலை உஅயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த அவர், “உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாகத்தான் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து, ஒரு நேரம் குறைந்தும், சில நேரம் உயர்ந்தும் வருகிறது. அதே சமயத்தில் சிலிண்டருக்கான மானியம் கொடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்தது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எல் முருகன்,
“தேர்தல் வாக்குறுதிகளாக திமுகவினர் என்ன சொன்னார்களோ? அதை செய்வதற்கு தவறி இருக்கிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களிடத்தில் வாக்குகளை வாங்கி விட்டு, ஒரு வருடம் ஆனபிறகும் கூட, அந்தத் தேர்தல் அறிக்கை குறித்து வாய் திறக்காதது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது.
இந்து மத கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிராக இந்த திமுக அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் அனைவருக்கும் சமமான ஒரு அரசாங்கமாக இருக்க வேண்டும். அனைத்து மதங்கள், அவருடைய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரு அரசாங்கமானது ஒரு மதத்திற்கு எதிராக செயல்படுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று எல் முருகன் தெரிவித்தார்.