திரைப்படம் என்றாலே பிலிம் ரோல்தான் நினைவுக்கு வரும். கால மாற்றத்தில் டிஜிட்டல் சினிமா வந்தது.
இந்த டிஜிட்டல் சினிமாவுக்கு, தென்னிந்தியாவில் ஆரம்பப்புள்ளி வைத்தது, 2008ம் ஆண்டு மே 8ம் தேதி வெளியான சிலந்தி திரைப்படம்தான்.
இந்த படத்தை திருப்பூரை சேர்ந்த சங்கர் பழனிச்சாமி, ஜி கம்பெனி சார்பில் தயாரித்திருந்தார். சினிமா பத்திரிகையாளர் ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் பாடல்களை எழுதி இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து இவர் கன்னடத்தில் ரணதந்த்ரா, தமிழில் அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா படங்களை இயக்கினார்.
முன்னா மற்றும் மோனிகா ஜோடியாக நடிக்க, ரியாஸ் கான், நீலிமா ராணி, சந்துரு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினர்.
முதல் டிஜிட்டல் சினிமாவான சிலந்தி வெளியாகி நேற்றுடன் பதினைந்து ஆண்டு ஆகிவிட்ட நிலையில், அப்படம் குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார், இயக்குநர் ஆதிராஜன்:
“சிலந்தி படத்தில் முன்னா மற்றும் மோனிகா கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருந்தனர். மற்றும் ரியாஸ் கான், நீலிமா ராணி, சந்துரு ஆகியோரும் நடித்திருந்தனர்.
பெளசியா பாத்திமா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். குரோசோவா படத்தொகுப்பை கவனித்திருந்தார். நடனக் காட்சிகளை தீனா வடிவமைத்திருந்தார்.
இந்த சிலந்தி படத்தை எடுக்கும் போது நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. சோனி எச் டி மற்றும் பானாசோனிக் கேமராக்களில் தான் படம் பிடித்தோம். காட்சிகள் எச்டி டேபில் தான் பதிவு செய்யப்பட்டது.
உச்சிவெயிலில் படப் பிடிப்பு நடத்தினால் ப்ளீச் ஆகிவிடும். அதனால் மதிய நேர படப்பிடிப்பை தவிர்த்தோம். இப்படி பல பிரச்சினைகள். தவிர அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் சுமார் 100 தியேட்டர்களில் மட்டுமே க்யூப் டிஜிட்டல் ப்ரொஜெக்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது. ஆகவே அவற்றில் மட்டுமே சிலந்தி படத்தை வெளியிட முடிந்தது.
ஆனாலும் ஊக்கப்படுத்திய தயாரிப்பாளர் சங்கர், உற்சாகப்படுத்திய பத்திரிகை நண்பர்கள், சிறப்பாக விளம்பரப்படுத்திய நண்பர் பி.ஆர்.ஓ. ஜான் ஆகியோரின் முயற்சியாலும், திரைக்கதை, இயக்கம் சிறப்பாக இருந்ததாலும் படம் வெற்றி பெற்றது” என்றார்.
தயாரிப்பாளர் சங்கர், “சிலந்தி படத்தை சுமார் 60 லட்சம் பட்ஜெட்டில் 21 நாட்களில் முடித்தோம். தமிழ்நாட்டில் ம்டடும் 3.5 கோடி வசூலானது.
தவிர, இந்தி தெலுங்கு போஜ்புரி உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
இப்படத்தின் வெற்றிதான் அடுத்தடுத்து பலரும் டிஜிட்டல் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது. இன்று முழுமையாக திரையுலகம் டிஜிட்டலுக்கு மாறிவிட்டது.
அந்த வகையில், தென்னிந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய படம் சிலந்தி” என்றார்.