சேலம் அருகே திறந்து கிடந்த வீடு ஒன்றுக்குள் திருடச் சென்ற திருடன் ஒருவன், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை ரசித்தவாறு நின்ற நிலையில், திடீரென விழித்த அந்தப் பெண் கூச்சலிட்டதால், வீட்டில் உள்ளவர்களிடம் சிக்கினான்.
சேலம் சூரமங்கலம் பகுதியில் இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், காற்றோட்டத்துக்காக சிலர் வீட்டின் கதவைத் திறந்துவைத்துக் கொண்டு தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அப்படி திறந்து கிடந்த வீடு ஒன்றுக்குள் திருடன் ஒருவன் நள்ளிரவில் நுழைந்துள்ளான். உள்ளே பெண் ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். இரவு நேர மின்விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்த திருடன், அப்படியே நின்று அவரையே பார்த்துக் கொண்டு இருந்துள்ளான்.
தூக்கம் சரியாக வராமல் அரைத்தூக்கத்தில் இருந்த அந்தப் பெண், தன் அருகில் ஏதோ ஒரு உருவம் நிற்பது போல் உணர்ந்து திடுக்கென விழித்துள்ளார். கண்முன்னே ஒருவன் நின்றிருப்பதைப் பார்த்து அப்பெண் கத்திக் கூச்சலிடவே, பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் என அத்தனை பேரும் விழித்துள்ளனர்.
சுயநினைவுக்கு வந்த திருடன், அங்கிருந்து தெறித்து ஓடத் தொடங்கியுள்ளான். விரட்டிப் பிடித்து உறவினர்கள் வெளுத்து எடுக்கவே, சட்டென வலிப்பு வந்தவன் போல் கை, கால்களை இழுத்துக் கொண்டு கீழே விழுந்துள்ளான்.
உடனடியாக ஆம்புலன்சுக்கும் போலீசுக்கும் வீட்டு உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திருடனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்த சின்ராசு என்பதும் அவன் மீது ஏற்கனவே 17 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
சின்ராசுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு வலிப்பு ஏற்படவில்லை என உறுதி செய்ததை அடுத்து, போலீசார் அவனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.