ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மொபைல் சிம் கார்டு விற்பனையாளர்கள் சிலர், சிம் கார்டு விற்பனையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கற்பனையான பெயரில் சிம் கார்டு வழங்கியது, ஒருவரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி மற்றொருவருக்கு சிம் கார்டு வழங்கியது என இவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சிம் கார்டுகளை தீவிரவாதிகள், அவர்களின் கையாட்கள், போதைப் பொருள் கடத்துவோர் மற்றும் பிற கிரிமினல்கள் பயன்படுத்தி வருவது தெரியவந்த நிலையில் அதுதொடர்பாக போலீஸார் 11 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் கூடுதல் ஆதாரங்கள் திரட்டுவதற்காக ஜம்மு காஷ்மீர் முழுவதும் 19 இடங்களில் மாநில புலனாய்வு முகமை (எஸ்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சோதனை நடைபெற்ற இடங்களில் பெரும்பாலானவை சிம் கார்டு விற்பனையாளர்கள் தொடர்புடைய இடங்கள் ஆகும்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் உள்ள தங்கள் எஜமானர்களுடனும் ஜம்மு காஷ்மீரில் உள்ள கையாட்களுடனும் தீவிரவாதிகள் தொடர்பு கொள்வதற்காக சில சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் 3 வழக்குகளில் இதற்கான வலுவான முதற்கட்ட ஆதாரம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.