காவல்கிணறு சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி இன்று 55 ரூபாய்க்கு விற்பனையானது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டாரத்தில் விளைகின்ற தக்காளி, மிளகாய், வெள்ளரிக்காய், தடியங்காய், வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் பொருட்கள் அனைத்தும் காவல்கிணற்றிலுள்ள தனியார் சந்தையில் விற்பனைக்கு வருவது வழக்கம்.
இந்த சந்தையில் தினசரி காய்கறி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி விலை பத்து ரூபாயாக இருந்தது. கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையால் தக்காளி பழுத்த உடனேயே செடியிலேயே வெடித்து நாசமாய் போயின.
இதனால் இந்த வாரத்தில் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்தது. ஆகையால், இன்று ஒரு கிலோ தக்காளி அதிகபட்ச விலையாக 55 ரூபாய் வரை சென்றது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் 70 முதல் 75 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.
இதனால் தக்காளி தேவையும் அதிகரித்து இருப்பதால் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என வியாபாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது. மேலும் இந்த விலை ஏற்றம் சில வாரங்கள் வரை இருக்கும் எனவும் கூறுகின்றனர். இந்த விலை ஏற்றத்தினால் தக்காளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM