சென்னை: தருமபுரம் ஆதீன திருமடத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்வதற்கு அனுமதி மறுத்து விதிக்கப்பட்ட தடையாணை விலக்கிக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குருமுதல்வர் குருபூஜையையொட்டி வருகின்ற 22-ம் தேதி நடைபெறவுள்ள பட்டினப்பிரவேச நிகழ்வில் ஆதீன குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் 233-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், “பட்டினப்பிரவேசத்தில் மனிதரை மனிதர்கள் சுமக்கிறார்கள் என தற்போது சிலர் குறை கூறுகின்றனர் தாய் தனது குழந்தையை 10 மாதங்கள் கருவில் சுமக்கிறார். சிவபெருமான் பிட்டுக்காக (புட்டு) மண் சுமந்துள்ளார். பானபத்திரருக்காக விறகு சுமந்துள்ளார். பட்டினப்பிரவேசம் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் மரபு. திருவாவடுதுறை ஆதீனத்தில் ஊர்ஊராகச் சென்றும் முற்காலத்தில் பட்டினப்பிரவேசங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது குருபூஜை தினத்தன்று ஒருநாள் மட்டும் 4 மணி நேரம் பல்லக்கு சுமக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில், தமிழக அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது.
திருவாவடுதுறை ஆதீனத்தில் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற்ற பட்டினப்பிரவேசத்தில் பல்லக்கில் எழுந்தருள திராவிடர் கழகத்தினர் தெரிவித்த எதிர்ப்பையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பல்லக்கில் ஏறவேண்டாம் எனத் தெரிவித்தனர். ஆனால், காலம்காலமாக கடைப்பிடிக்கப்படும் மரபை மாற்ற வேண்டாம். நாங்கள் பல்லக்கை தூக்குகிறோம் என பல்லக்கு சுமப்பவர்கள் கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் யாரையும் அடிமைப்படுத்தவில்லை. அவர்கள் தாய் குழந்தையை சுமப்பது போல, அவர்கள் தங்கள் குருவை தோளில் சுமக்கின்றனர்.
பல ஆதீனங்களில் இந்த மரபு நின்றுவிட்டது. ஆனால், தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூடிப்பேசி நல்ல முடிவினை எடுத்துள்ளனர். இந்த பட்டினப்பிரவேசம் காலம் காலமாக தொடர்ந்து நடைபெறும்” என்று கூறினார்.