'பட்டினப்பிரவேச விஷயத்தில் தமிழக அரசு அடிபணிந்தது' – எச்.ராஜா கருத்து

பட்டினப்பிரவேச விஷயத்தில் தமிழக அரசு அடிபணிந்தது என்று பாஜக முன்னாள் தேசியச் செயலர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பட்டினப்பிரவேசம் விழாவை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்திருக்கிறார். அவருக்கு நமது நல் ஆசிகள். இந்த விழாவை எப்படியும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தோம். அதற்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிகவும் முயன்றிருந்தார். அவருக்கும், அறநிலையத்துறை ஆணையர், செயலர் ஆகியோருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம். தோளில் சுமப்பதை மனிதாபிமானம் அற்றது என்று சிலர் விமர்சிக்கின்றனர், ஆனால் விருப்பப்பட்டுத்தான் தொண்டர்கள் சுமக்கின்றனர் என்று நாங்கள் கூறுகிறோம். இறைவன் கொடுத்த தவத்தினால் கிடைக்கிறது இந்த பல்லக்கு. இதனை சுமப்பதை தொண்டர்கள் எளிதானதாகவே நினைக்கின்றனர்” என்று கூறினார்.

இந்நிலையில், பட்டினப்பிரவேச அனுமதி குறித்து பாஜக முன்னாள் தேசியச் செயலர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் “அடி மேல் அடி. அயோத்யா மண்டபம் விஷயத்தில் அறநிலையத்துறைக்கு அடி. தருமை ஆதீன பட்டினப்பிரவேச விஷயத்தில் தமிழக அரசு அடிபணிந்தது. ஒன்றுபட்ட இந்து சக்தி வென்றுதீரும். இது சத்தியம்” என்று பதிவிட்டுள்ளார்.

அயோத்தியா மண்டப சர்ச்சை என்ன? சென்னை மேற்கு மாம்பலம் ஆர்யகவுடா சாலையில் உள்ள ஸ்ரீ ராம் சமாஜ் என்ற தனியார் அமைப்பு கடந்த 1958-ம் ஆண்டு அயோத்தியா மண்டபத்தை ஏற்படுத்தியது. இங்கு கலை, கலாச்சாரம், சமயம் தொடர்பான பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அயோத்தியா மண்டபம் ஒரு கோயில் என்று கூறியும், அங்கு உண்டியல் வைத்து பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும், அந்த தனியார் அமைப்பு பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கூறி அயோத்தியா மண்டபத்தை இந்துசமய அறநிலையத் துறை கடந்த 2013-ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தக்காரை நியமித்தது.

இதை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், கோயில் என்பதற்கான தீர்க்கமான எந்த காரணங்களும் கூறாமல் அயோத்தியா மண்டபத்துக்கு தக்கார் நியமனம் செய்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர். மேலும், மாற்றுத்தீர்வு உள்ளதாகக் கூறி பல ஆண்டுகளுக்கு பின் தள்ளுபடி செய்தது தவறு எனக் கூறி தனி நீதிபதி உத்தரவையும் ரத்து செய்தனர். அதேவேளையில், ஸ்ரீராம் சமாஜத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து புதிதாக விசாரணை நடத்தலாம் என இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

இதைக் குறிப்பிட்டே, எச்.ராஜா அறநிலையத்துறைக்கு அடி மேல் அடி விழுவதாகக் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.