இனி வரும் காலங்களில் பட்டின பிரவேசம் மாற்றாக வேறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய அனைத்து ஆதீனங்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண்டாண்டு காலமாக நடைபெற்ற தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் காலமாற்றத்திற்கு ஏற்ப நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தருமபுர ஆதீனம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே முதலமைச்சரை நேற்று சந்தித்த பிறகு இந்த ஆண்டு அனுமதி வழங்குவதற்கு உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வாரணவாசி பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, இனி வரும் காலங்களில் இந்த பட்டின பிரவேச நிகழ்வுக்கு மாறாக வேறு நிகழ்வுகளை நடத்த அனைத்து ஆதீனங்களையும் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
முன்னதாக, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டின பிரவேசம் நிகழ்வில் பல்லக்கு தூக்கி செல்வதற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்து வருகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM