பாம்பு, புலி படம் எடுப்பதில் சரவணக்குமார் சாதனை| Dinamalar

அடர்ந்த காடுகளுக்கு சென்று வன விலங்குகள், பறவைகளை இயற்கை சூழ்நிலை மாறாமல் அழகாகவும், தத்ரூபமாகவும் புகைப்படம் எடுப்பது மதுரையை சேர்ந்த சரவணக்குமாருக்கு கைவந்த கலை.

தேசிய பறவைகள் சரணாலயம், முதுமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்துார் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், குஜராத் கிர் காடுகள், அசாம் தேசிய புலிகள் காப்பகம், மூணாறு ராஜ மலை என சரவணக்குமார் கால்படாத காடுகளே இல்லை எனலாம். படம் எடுக்க வனத்துறை அனுமதி பெற்று செல்கிறார்.

இவர் 2019ல் எடுத்த புலி, பாம்பு புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பார்த்து லண்டன் ‘வைல்டு லைப் போட்டோகிராபி மெகசின்’ வெளியிட்டது. 2020ல் லண்டன் ‘வைல்டு பிளானட்’ பத்திரிகையில் சரணவக்குமார் எடுத்த புகைப்படங்கள் வெளியாகின.பி.காம்., படித்த சரவணக்குமார், போட்டோகிராபி தொழிலில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை மனநலம் குன்றியோருக்கு கொடுத்து உதவி வருகிறார்.

சரவணக்குமாரிடம் பேசியதிலிருந்து…

வைல்ட் லைப் போட்டோகிராபர் தொழில் உனக்கு செட்டாகாது. எம்.காம்., முடித்து வேலைக்கு சென்று விடு என பெற்றோர் முதல் நண்பர்கள் வரை அட்வைஸ் செய்தனர்.மனசுக்கு பிடிச்சதை செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்து வைல்ட் லைப் போட்டோகிராபராக முழு வீச்சாக களம் இறங்கினேன். 2022ல் டில்லியில் ‘தி லைட் டவுன்’ நடத்திய சர்வதேச புகைப்பட போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த 50 புகைப்பட கலைஞர்களில் நானும் ஒருவன்.

புகைப்படங்களை அவர்கள் இதழில் வெளியிட்டு என்னை கவுரப்படுத்தினர்.அதைத் தொடர்ந்து ’35 அவார்ட்ஸ்’ எனும் பெயரில் தேசிய புகைப்பட கலைஞர்கள் போட்டியிலும் பங்கேற்றேன். 3 கட்ட தேர்வுகளில், 2ம் கட்ட தேர்வில் எனது புகைப்படம் தேர்வானது. 3 கட்ட தேர்விலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.

இவரை வாழ்த்த 70108 45296ல் ஹலோ சொல்லலாம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.