நைரோபி,
கென்யாவில் மவுண்ட் கென்யா என்ற தேசிய பூங்காவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கின்யானா கிராமத்தில் பண்ணை ஒன்று உள்ளது. இதில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர் வன துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவர், தனது முதலாளியின் வீட்டுக்கு வெளியே சிங்கம் ஒன்று புதரில் ஒளிந்துள்ளது என கூறியுள்ளார்.
அந்த பகுதியில் சிங்கங்கள் அலைவதற்கான சமீபத்திய தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், குடியிருப்புவாசிகள் சிலர் தங்களுடைய கால்நடைகள் காணாமல் போகின்றன என பல புகார்களை தெரிவித்து உள்ளனர்.
அதனால், வன துறை அதிகாரிகள் இதனை தீவிர கவனத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதுபற்றி 3 பேர் கொண்ட குழுவின் தலைவரான சைரஸ் பிஜிவே கூறும்போது, ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் உள்ளனரா? என நாங்கள் முதலில் உறுதி செய்தோம். அதன்பின் வன அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் புதரின் கீழ் பை ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது என கூறியுள்ளார்.
வீட்டு உரிமையாளர் ஒருவர், காய்ந்து போக கூடாது என்பதற்காக சில விதைகளை பை ஒன்றில் வைத்து, நிழலான புதர் பகுதியில் விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் வெளியே போன சமயத்தில் வன துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த பெண் வீடு திரும்பியதும், அவரிடமே சிங்கம் உள்ளது என்றும் அதனால், வீட்டின் பின்புற வாசல் வழியே செல்லும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்பின்னரே சோதனையில் சிங்கத்திற்கு பதிலாக வீட்டு ஜன்னலின் கீழே புதரில் பை இருந்தது தெரிய வந்துள்ளது.
இது தவறான தகவல் என்றாலும், மனித, சிங்க மோதல் நடைபெறாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதற்காக பொதுமக்களை கென்ய வன துறை பாராட்டியுள்ளது.