புதுவை ஜிப்மரில் அனைத்து பதிவுகளிலும் இந்தி கட்டாயம்- இயக்குனர் ராகேஷ் அகர்வால் உத்தரவு

புதுச்சேரி:

புதுவையில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது.

ஜிப்மரில் புதுவை மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். சமீப காலமாக ஜிப்மரில் மருந்து மாத்திரை விநியோகமின்மைத் தொடங்கி பலவித குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அலுவல் மொழி விதி 1976ன்படி மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகள், பதிவேடுகள், தலைப்புகள் ஆகியவற்றில் இந்தி, ஆங்கிலம் மொழி மட்டுமே இருக்கவேண்டு்ம். பாராளுமன்றக்குழுவுக்கு வழங்கப்பட்ட உறுதி எண் 7ன்படி அலுவல் மொழியாக இவை இருக்க வேண்டும்.

ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என எல்லாவற்றின் தலைப்புகள், பணிக்கால கணக்குகள் ஆகியவை அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

எதிர்காலத்தில் பதிவேடுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் அனைத்தும் முடிந்தவரை இந்தியில் மட்டும் எழுத வேண்டும்.

அனைத்து துறைகளின் தலைவர்கள், பிரிவு பொறுப்பாளர்கள், ஊழியர்கள் அனைவரும் இந்த விதியை கண்டிப்பாக கடைபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக அலுவல் மொழி தொடர்பாக பாராளுமன்ற குழுவுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகள், அதன் பொறுப்பு அதிகாரிகள் மூலம் இது கண்காணிக்கப்படும். இதுதொடர்பாக உதவி தேவைப்பாட்டால் இந்தி செல்லை அணுகலாம்.

இவ்வாறு ராகேஷ் அகர்வால் உத்தரவில் கூறியுள்ளார்.

ஜிப்மரில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவ கல்லூரியிலும் நாடு முழுவதும் இருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் உள்ளனர்.

அதுபோல், சிகிச்சைக்கு வருவோரில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் மக்கள். இதனால் பதிவேடுகள், சேவைப் புத்தகங்கள் ஆகியவற்றில் இந்தி மட்டுமே வரும்காலத்தில் இடம் பெறுவது நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.