இருபது வயதில் கணவரை இழந்த பெண், தனது ஒற்றை மகளை வளர்ப்பதற்காக தோற்றத்தையே ஆணாக மாற்றிக்கொண்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக வாழ்ந்துவருகிறார். ஒற்றையாக பிள்ளைகளை வளர்க்கும் எத்தனையோ தாய்மார்களில் மாறுபட்டவர் இந்த பேச்சியம்மாள் என்ற முத்துமாஸ்டர்.
எப்போதும் வென்றான் ஊருக்கு அருகே காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில், முத்து மாஸ்டர் வீடு எது என்று கேட்டால் அடையாளம் காட்டுவது பேச்சியம்மாளின் வீட்டை. 57 வயதான பேச்சியம்மாள், வேட்டி, சட்டை உடுத்தி, கிராப் தலையுடன் ஆணாகவே காட்சியளிக்கிறார். 30 ஆண்டுகளாக இதே தோற்றம்தான். டீக்கடை தொடங்கி, பரோட்டா கடை வரை வேலை பார்த்துவந்ததால் மாஸ்டர் என்றே அடையாளம் காணப்படுகிறார் பேச்சியம்மாள். இவரின் இந்த தோற்றத்துக்கான பின்னணியை அவரே கூறுகிறார்.
எந்த மகளுக்காக ஆண்வேடம் தரித்தாரோ, அந்த மகளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்தபின், 100 நாள் வேலை, பெயிண்ட் அடிப்பது, தேங்காய் கடை என கிடைக்கும் வேலைகளை செய்துவருகிறார். திருமண வாழ்க்கை 15 நாட்களில் முடிந்தாலும், மகள் என்ற உறவுக்காகவும், தனது சுயமரியாதைக்காகவும் தோற்றத்தையே மாற்றிக்கொண்ட முத்து மாஸ்டருக்கு இன்றுவரை அதில் எந்த வருத்தமும் இல்லை.
கணவர் இறந்தபோது இறப்புச் சான்று வாங்காத நிலையில், ஆதார் அட்டையில் முத்து என்ற ஆண் பெயரே இருப்பதால் விதவை நிதி உதவி, முதியோர் ஓய்வூதியத்தொகை எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. கிடைத்தால், தள்ளாத வயதில் உதவியாக இருக்கும் என்கிறார் முத்துமாஸ்டர் என்ற பேச்சியம்மாள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
