அதிசயங்களுக்கு பெயர் பெற்ற ஆனைமலை புலிகள் காப்பகம் உலக பாரம்பர்ய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆனைமலை காடுகளில் மின்மினிப் பூச்சிகளின் ஒளி நடனம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடிக்கணக்கிலான மின்மினிப் பூச்சிகள் மரங்களில் ஒன்றிணைந்து, ஒளியை உமிழவே ஆனைமலை காடுகள் மென் பச்சை நிறத்தில் ரம்மியமாக காட்சியளித்தது. அதன் படம் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறை மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்மினிப் பூச்சிகளின் இந்த ஒளி உமிழ்வு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 1999-ம் ஆண்டு மற்றும் 2012-ம் ஆண்டு இந்த நிகழ்வை பார்த்துள்ளனர்.
பொதுவாக பெண் மின்மினிப் பூச்சிகளுக்கு ஒளிரும், பறக்கும் திறன் இருக்காது. ஆண் மின்மினிப் பூச்சிகள் இந்த ஒளிக்காட்சிகளை அடிப்படையாக வைத்து, தங்களது இணையை தேடிக் கொள்ளும்.
தங்கள் வாழ்நாளில் முட்டை பருவம், புழு பருவத்தில் தான் பெரும் பகுதியை கழிக்கும். நன்கு வளர்ந்த பிறகு மின்மினிப் பூச்சிகள் சில வாரங்கள் மட்டுமே வாழும். ஆனைமலை காடுகள் எவ்வளவு பசுமையாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். உலகம் முழுவதும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மின்மினிப் பூச்சிகள் உள்ளன.
ஆனைமலை காடுகளில் அப்ஸ்கோண்டிடா (Abscondita) என்ற மின்மினிப் பூச்சி இனம் இருப்பதாக அறியப்படுகிறது. உலகம் முழுவதும் ஆங்காங்கே, மின்மினி பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் சற்றே ஆறுதல் அளிக்கிறது” என்றனர்.