“ராஜபக்சே அரசு பதவி விலகினால் இலங்கையில் என்ன நடக்கும்?" – கொழும்பு எம்.பி மனோ கணேசன்

இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. `ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும்’ என்பதற்கான மக்கள் போராட்டமும் வீரியமடைந்துவருகிறது. சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் பழைய நாடாளுமன்றம் அமைந்திருக்கும் கால் ஃபேஸில் போராடிவருகின்றனர். மே 6 அன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது. `இந்த நிலைமை சீராக இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம்’ என்றிருக்கிறது இலங்கை அரசு. இலங்கையின் தற்போதைய நிலை பற்றியும், எதிர்கால நிலை பற்றியும் அறிந்து கொள்ளக் கொழும்பின் எம்.பி-யும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனிடம் பேசினோம்.

mano ganesan, colombo MP

“இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு, ராஜபக்சே அரசு மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. நாட்டின் இந்த நிலைமைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த நிலைமைக்கு மிக முக்கியக் காரணமாக ராஜபக்சே அரசைச் சொல்லலாம். கோத்தப்பய ராஜபக்சே அரசும், 2005-லிருந்து மகிந்த ராஜபக்சே அரசும் இலங்கையைச் சீனாவிடம் அடைமானம் வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தனது ராணுவ வர்த்தகங்களுக்காக இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்குத் தேவைப்பட்டது. அதற்காக அதிக கடனை வழங்கி அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு துறைமுக நகரத்தையும் தன் வசமாக்கிக் கொண்டது சீனா. இதனால் நாடு நாசமாகிவிடும் என்று தெரிந்தேதான் ராஜபக்சே அரசு சீனாவுடன் நல்லுறவு வைத்துக்கொண்டது. ராஜபக்சே குடும்பத்திலிருக்கும் நிறையப் பேர் சீனாவின் கைக்கூலிகள்தான்” என்றார் ஆவேசமாக.

தொடர்ந்து பேசிய அவர், “சரியான நிர்வாகமின்மை, ஊழல் உள்ளிட்டவை காரணமாக நாடு நாசமாகிவிட்டது. தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரை முன்னிறுத்தித்தான் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றது ராஜபக்சே கட்சி. போர் சமயத்தில் அண்ணன் மகிந்த அதிபராக இருந்தார். தற்போதைய அதிபர் கோத்தப்பய, அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். ஈழப் போரை முன்னிறுத்தி வாக்கு கேட்டு, சிங்களர்களின் பேராதரவு பெற்று வெற்றிபெற்றனர் ராஜபக்சே சகோதரர்கள். இவர்களுக்கு வாக்களித்தவர்களில், 99 சதவிகிதம் பேர் சிங்களர்கள்தான்” என்றார்.

“தற்போது ராஜபக்சேவுக்கு வாக்களித்த பெரும்பாலான சிங்களர்கள், அவருக்கு எதிராக மாறிவிட்டனர். குறிப்பாக, இந்த நாடு நாசமடைந்ததற்கு பௌத்த மதத் துறவிகள்தான் காரணம். ஒரு நாட்டில், இந்து மத குருமார்கள் கோயிலுக்குச் செல்ல வேண்டும், இஸ்லாமிய மதகுருக்கள் மசூதிகளுக்குச் செல்ல வேண்டும், பௌத்த துறவிகள் அவர்களது ஆலயங்களுக்குச் செல்ல வேண்டும் அப்போதுதான் நாடு உருப்படும். ஆனால், இங்கு மிகப்பெரிய அதிகாரம், செல்வாக்கு எல்லாம் பௌத்த மத துறவிகளிடத்தில்தான் இருக்கிறது. அவர்களால்தான் நாடு உருப்படாமல் போனது என்று நான் துணிந்து சொல்வேன். அவர்களை நிச்சயம் முடக்க வேண்டும்” என்றார் காட்டமாக.

மேலும், “தற்போது ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை சமர்ப்பித்திருக்கிறோம். அதன்படி ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்றவரிடம், “ஒருவேளை ராஜபக்சே பதவி விலகினால் என்ன செய்வீர்கள்… இவ்வளவு பிரச்னைகள் நிலவும் ஒரு நாட்டை புதிய அரசு அமைத்தால் சரி செய்துவிட முடியுமா?” என்று கேட்டோம்.

“இலங்கையில் தற்போது ஒரு நிலையான அரசு இல்லை. நிலையான, ஸ்திரமான அரசு இருந்தால்தான் உலக நாடுகளும், வங்கிகளும் நிதி அளிக்க முன்வருவார்கள். எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில்தான் எங்கள் கட்சி அங்கம் வகிக்கிறது. ராஜபக்சே அரசு பதவி விலகியதும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா தலைமையில் ஓர் நிலையான, ஸ்திரமான அரசை அமைப்போம். சீனாவை உதறித் தள்ளிவிட்டு, ஜனநாயகத்தை விரும்பும் உலக நாடுகளிடம் கடன் பெற்று இலங்கையின் பொருளாதாரத்தைச் சரி செய்வோம்” என்றார் மனோ கணேசன். `ராஜபக்சே பதவி விலகுவாரா?’ என்ற கேள்விக்கு, “நிச்சயம் பதவி விலகுவார், விலக வைப்போம். வரலாறு அதைத்தான் சொல்கிறது” என்கிறார் தெளிவாக!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.