வீட்டு வேலைக்காரராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக இருந்துவந்த ஒருவரே கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி அனுராதா. பட்டய கணக்காளாரான ஸ்ரீகாந்த்திற்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவிலேயே குடியேறியதால் வயதான இருவரும் சென்னையில் தனியாக வசதித்து வந்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று அங்கேயே 3 மாதம் தங்கியிருந்து குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் காலத்தை கடத்தி வந்திருக்கின்றனர். இந்த நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த ஷர்மா என்பவர் 20 ஆண்டுகளாக தன் வீட்டில் வேலை பார்த்து வந்ததன் நம்பிக்கையின் பேரில் அவரது மகன் கிருஷ்ணா என்கிற மதன் லால் கிருஷ்ணனுக்கும் தனது வீட்டில் வேலை போட்டு கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.
அதுமட்டுமின்றி, கிருஷ்ணா தங்குவதற்கும் தனது வீட்டிலேயே இடமும் கொடுத்திருக்கிறார். ஆனால், அப்போது தெரியவில்லை இந்த கிருஷ்ணாவே தங்களுக்கு எமனாக மாறுவான் என்று. இந்தநிலையில், அமெரிக்கா சென்றிருந்த தம்பதியினர் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.30மணிக்கு சென்னை திரும்பினர். தாங்கள் சென்னை திரும்பியதையும் அமெரிக்காவில் இருக்கும் தனது மகனுக்கும் தகவல் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றனர்.
ஆனால், காலை 8.30 மணிக்கு மேல் தனது அப்பா, அம்மா இருவரின் செல்போன்களும் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து வீட்டு வேலைக்கார கிருஷ்ணாவைக் கேட்டபோது, இருவரும் தூங்குவதாகவும், சிறிது நேரம் கழித்து அவர்கள் எழுந்தவுடன் கூப்பிடவதாகவும் கூறியிருக்கிறார். 10மணிக்கு மேலும் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததும், கிருஷ்ணா முன்னுக்குப் பின் முரணாக பேசியதும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் தனது நண்பர் ஸ்ரீநாத்துக்கு தகவல் கொடுத்து பார்க்கச் சொல்லியிருக்கிறார் மகன் சஸ்வத். அங்கு சென்ற ஸ்ரீநாத்திற்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. வீட்டில் பெற்றோர் இல்லை, வேலைக்காரனும் இல்லை, தந்தையின் இன்னோவா காரும் இல்லை. கண்ட காட்சியை அப்படியே சஸ்வத்திடம் கூறி அங்கிருந்து நேரடியாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
துரிதமாக விசாரணையில் இறங்கிய மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் விசாரணையை தீவிரப்படுத்தினார். காணமால் போன காரையும், கிருஷ்ணாவின் செல்போன் நம்பரையும் ஆய்வு செய்தனர். மேலும், மயிலாப்பூர் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்ததில் படித்திருந்த ரத்தக்கறையையும், அதனை டெட்டால் போட்டு சுத்தமாக துடைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். இதன்மூலம் தம்பதியினர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே காணாமல் போன இன்னோவா கார் ஆந்திராவை நோக்கி செல்வது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா போலீசாரின் உதவியுடன் இன்னோவா காரை மடக்கிப் பிடித்தனர். அதில் பயணம் செய்த கிருஷ்ணா என்கிற மதன்லால் கிருஷ்ணா மற்றும் ரவி என்கிற ரவி ராயை ஆந்திரா போலீசார் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியினரை கொலை செய்தததைத் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் 8 கிலோ தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருட்களும் கைப்பபற்றப்பட்டுள்ளது. தன் முதலாளியிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக நினைத்துக்கொண்டு அதை கொள்ளையடித்து விட்டு நேபாளத்திற்கு தப்பிச் சென்றுவிட்டால் தங்களை யாரும் கைது செய்யமாட்டர்கள் என்ற நினைத்து இந்த கொலையை செய்ததாக கிருஷ்ணா கூறியதாக காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் கூறினார்.
20 ஆண்டுகளாக தங்கள் வீட்டில் ஒருவராக எண்ணி நம்பிக்கைக்குரியவராக இருக்க வைத்த தன் முதலாளியையே கொலைசெய்யும் அளவுக்கு துணிய வைத்த பணத்தாசையால் இன்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர் கிருஷ்ணாவும், ரவிராயும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM