
அப்பா ரமணா, அம்மா விஜயா இருவருமே வாலிபால் வீரர்கள். ரமணா இந்திய தேசிய வாலிபால் குழுவுக்காக விளையாடிவர். இந்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. சிந்துவின் அம்மா விஜயா சென்னையில் படித்தவர். சிந்துவின் அக்கா திவ்யா மருத்துவர்.

பெற்றோர் வாலிபால் விளையாடும்போது, உடன் செல்வார் சிந்து. அப்போது அருகில் இருக்கும் பாட்மின்டன் கோர்ட்டில் ‘விளையாட்டாக’ விளையாட ஆரம்பித்திருக்கிறார். சிந்துவுக்கு பாட்மின்டனில் அதிக ஆர்வம் இருப்பதைக் கண்ட அவரின் தந்தை 7 வயதில் முறையான பயிற்சியில் சேர்த்திருக்கிறார்.

படிப்பிலும் கில்லி. செயின்ட் ஆன்ஸ் கல்லூரியில் பி.காம் படித்து பின், எம்.பி.ஏ படித்துமுடித்திருக்கிறார்.

வீட்டிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் பயிற்சி மையம். முடிந்ததும் பள்ளிக்கூடம். மீண்டும் மாலை பயிற்சி. ஒன்பது வயதிலிருந்து சிந்துவின் தினசரி வழக்கம் இதுதான். இந்த உழைப்புதான் அவரை 13 வயதில் சர்வதேசப்போட்டிகளில் விளையாட வைத்திருக்கிறது.

பயிற்சியின்போது கோபிசந்த், சிந்துவுக்குத் தெரியாமல் சர்ப்ரைஸ் டார்கெட் வைப்பார். ஆனால், பயிற்சி முடியும்போது கோபிக்குதான் சர்ப்ரைஸ் இருக்கும். அவர் நினைத்த டார்கெட்டைவிட, ஒருபடி அதிக பாய்ன்ட்ஸ் எடுத்திருப்பார் சிந்து.

பயோகிராபி எழுதும் எண்ணத்தில் இருக்கிறார். “பலருக்கும், குறிப்பாக விளையாட்டுத்துறையைத் தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்பதாலேயே எழுதப்போகிறேன்” என்கிறார் சிந்து.

சிந்துவுக்கு மிகவும் பிடித்த நிறம் மஞ்சள். முக்கியமான போட்டிகளில் எல்லாம் மஞ்சள் நிறத்தில் பார்க்கலாம்.

உங்களைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்றால் சிந்து சொல்வது: “களத்துக்கு வெளியே மிகவும் நட்பானவள்; களத்தினுள் மிகவும் ஆக்ரோஷமானவள்.”

பெரும்பாலும் சகவீரர்களோடு நட்போடே இருப்பது சிந்துவின் ஸ்பெஷாலிட்டி. ரியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் மோதிய ஸ்பெய்ன் வீராங்கனை கரோலினாவுடனும் கோர்ட்டுக்கு வெளியே கலகலவென்று பேசிக்கொண்டிருப்பார்.