Rahul Gandhi: தற்காப்புக் கலையில் `Black Belt'; லண்டனில் வேலை; காங்கிரஸில் அரசியல் பயணம்!

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற டேராடூன் பள்ளியில் தன் பள்ளிப்படிப்பையும், செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் எம்.பில் பட்டமும் பெற்றிருக்கிறார் ராகுல்.

ராகுலின் பாட்டி இந்திரா காந்தி, அப்பா ராஜீவ் காந்தி ஆகியோர் படுகொலையில் மரணமடைந்ததால், ராகுலின் பாதுகாப்பில் மிக அதிக கவனம் செலுத்தப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் படிக்கும்போது, அங்கே இவரது பெயர் Raul Vinci.

பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதும் சரி, அதன்பிறகும் சரி, மிக அமைதியானவர் என்ற பெயர் ராகுலுக்கு உண்டு. ஜப்பானின் புகழ்பெற்ற Aikido தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.

முழுநேர அரசியலுக்கு வருவதற்கு முன்பு, லண்டனில் மேனேஜ்மென்ட் குரு மைக்கேல் போர்டரின் மானிட்டர் குரூப்பில் பொருளாதார ஆலோசகராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

அடிக்கடி இவரிடமிருந்து வரும் வார்த்தை ‘தேங்க்யூ’. யாரேனும் கதவு திறந்தால், தேநீர் கொடுத்தால், வழி விட்டால், உட்காரச் சொன்னால் என்று ஒருநாளுக்கு நூற்றுக்கணக்கான தேங்க்யூ இவரிடமிருந்து வந்துகொண்டே இருக்கும்.

சூப்பர் பைக் பிரியர். திடீரென்று ஹெல்மெட் மாட்டிக்கொண்டு ரைடு கிளம்புகிற ரகம். சமீபகாலமாக பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடியால் இது குறைந்துள்ளது. ஹார்லி டேவிட்சன், யமஹா ஆர்-1, டுகாட்டி என்று பல சூப்பர் பைக்குகளை வாங்கிவைத்துள்ளார்.

வெளியூருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது உதவியாளர்கள், சமையல்காரர் உடன் வருவார்கள். அப்படி வரும்போது, அவர்களுடன் அமர்ந்துதான் உணவு உட்கொள்வார் ராகுல். இது பெரும்பாலும் வேறெந்தத் தலைவர்களிடமும் காணமுடியாத விஷயம்.

நண்பர்கள், கட்சியில் நெருக்கமாக இருப்பவர்களின் பிறந்தநாளை ஞாபகம் வைத்திருந்து சர்ப்ரைஸ் வாழ்த்து அனுப்புவார். பெரும்பாலும் ராகுலிடமிருந்து அழைப்பு வரும்.

மிக எளிமையான உடைகளை மட்டுமே அணிவார். கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் பகட்டான உடைகள் அணிந்து இவர்முன் செல்லத் தயங்குவதுண்டு.

யார் என்ன கருத்து சொன்னாலும், சொல்வது யார் என்பதை விடுத்து, கருத்தைப் பார்த்து ஏற்றுக்கொள்வார். ஒருவேளை அந்தக் கருத்து தவறாகிவிட்டால், கோபப்பட மாட்டார். அப்போது இவர் சொல்லும் வாசகம்: “Its Good you learn on your own.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.