கூட்டத்தில் ஒருவனாய் நடிக்க ஆரம்பித்து, இன்று பெரும் மக்கள் கூட்டத்தையே தன் பக்கம் திருப்பியிருக்கும் விஜய் சேதுபதியின் ‘வாவ்’ தகவல்கள் இதோ.
விஜய் சேதுபதி ராஜபாளையத்துக்காரர். விஜய் சேதுபதியுடன் சேர்த்து உடன்பிறந்தவர்கள் நான்கு பேர்.
மனைவி ஜெஸ்ஸி. யாஹு சாட் லவ். `அவங்க வேலைக்குப் போய் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டதால, நான் வாய்ப்புகள் தேடி ஓட ஆரம்பிச்சேன். இன்றைய என் வளர்ச்சிக்கு அச்சாரம் அவங்க” என்பார்.
அம்மா சரஸ்வதி இவரை “அப்பா” என்றுதான் அழைப்பார். இவர் அம்மாவை அழைப்பது: “டேய் சரசு.”
துணிக்கடை சேல்ஸ்மேன், டெலிபோன் பூத் ஆபரேட்டர் என்று சின்னச் சின்னதாய் நிறைய வேலைகள் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி. கல்லூரிப்படிப்புக்குப் பின் துபாயில் அக்கவுன்டன்ட் வேலை.
விடுமுறையில் மனைவி ஜெஸ்ஸியைப் பார்க்க இந்தியா வந்த சேதுபதி, `இனி துபாய் வேண்டாம்’ என உதறிவிட்டு, குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
`இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ – பட ரிலீஸுக்கு முன்பு வரை சென்னையின் தெருவோர டீக்கடைகளில் நண்பர்களோடு அரட்டையடித்தபடி விஜய் சேதுபதியைப் பலர் பார்த்திருக்கக் கூடும்
பைக் பிரியர். அதுவும் புல்லட் என்றால் கூடுதல் அன்பு. சில வருடங் களுக்கு முன் பழைய ராஜ்தூத் பைக்கைத் தேடிப்பிடித்து வாங்கினார். சென்னை வீதிகளில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குடும்ப சகிதம் இன்றும் வலம்வருகிறார்
பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு. அதுவும் பிளாக் அண்டு வொய்ட் காலப்பாடல்கள் மிகப்பிடிக்கும். கேரவனுக்குள் இருக்கும்போது பழைய பாடல் வீடியோக்கள் பார்ப்பதும், கேட்பதும்தான் சேதுபதியின் ரிலாக்ஸ் ரகசியம்.
புத்தகம் படிக்க, சினிமா பார்க்க நேரமில்லாததை பெரிய குறையாகச் சொல்வார். “நெறைய இலக்கியம் படிக்கணும்” என்பார். ஏகப்பட்ட படங்களின் கலெக்ஷன் வைத்திருக்கிறார்
சின்னச்சின்ன அவமானங்களை மறக்கவே மாட்டார். “அவற்றிலிருந்து நிறைய கத்துக் கிட்டேன்’’ என்பார். விஜய் சேதுபதி இன்று பலருக்கு இன்ஸ்பிரஷேன்.