திருப்பதி, மே.9
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர்.
தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் பக்தர்கள் தரிசனம் டிக்கெட் இல்லாமல் அனுப்பி வருகின்றனர்.
பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து ஏழுமலையான் கோவில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
நேற்று காலை முதல் ஏழுமலையான் கோவில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 25 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது.
காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக பக்தர்கள் செல்கின்றனர்.
அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 பாதையில் பக்தர்கள் அதிகளவில் செல்கின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் வாராந்திர சேவைகள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 75, 876 பேர் தரிசனம் செய்தனர். 32,164 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.46 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.