அன்னையர் தினத்தன்று 1 ரூபாய் இட்லி பாட்டிக்கு புது வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!

2022 அன்னையர் தினத்தை முன்னிட்டு, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘இட்லி அம்மா’ என்று அன்புடன் அழைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த எம் கமலாத்தாளுக்கு வீடு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். ‘இட்லி பாட்டி’ என்று அன்புடன் அழைக்கப்படும் கமலத்தாள், கடந்த 30 ஆண்டுகளாக வெறும் 1 ரூபாய்க்கு இட்லிகளை சமைத்து விற்று வருகிறார்.

‘இட்லி அம்மா’ தனது புதிய வீட்டிற்குள் நுழையும் வீடியோவை தனது ட்வீட்டரில் பகிர்ந்த மஹிந்திரா, “அன்னையர் தினத்தன்று இட்லி அம்மாவுக்கு பரிசளிக்கும் வகையில் சரியான நேரத்தில் வீட்டைக் கட்டி முடித்த எங்கள் குழுவினருக்கு நன்றி. வளர்ப்பு, அக்கறை மற்றும் தன்னலமற்றவள் என அவர் ஒரு தாயின் நற்பண்புகளின் உருவகம். அவரையும், அவருடைய பணியையும் ஆதரிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. உங்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

இட்லி அம்மா கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடிவேலம்பாளையத்தில் வசிக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாம்பார் மற்றும் சட்னியுடன் இட்லிகளை வெறும் ₹ 1க்கு விற்று வருகிறார்.

தனது லாபத்தைப் பற்றி கவலைப்படாமல், தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தனது சேவைகளை தொடர்ந்தார். 2019 இல், அவரது கதை இணையத்தில் வைரலானது.

அப்போது மஹிந்திரா, அவர் இட்லி சமைக்கும் வீடியோவைப் பகிர்ந்து அவருக்கு உதவ முன்வந்தார்.

“கமலத்தாள் போன்றவர்களின் வேலையைப் போல நீங்கள் செய்யும் அனைத்தும் ஒரு பகுதியளவு கூட தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று உங்களை ஆச்சரியப்படுத்தும் கதைகளில் ஒன்று. அவர் இன்னும் விறகு எரியும் அடுப்பைப் பயன்படுத்துவதை நான் கவனிக்கிறேன். யாருக்காவது அவரைத் தெரிந்தால், அவருடைய வியாபாரத்தில் ‘முதலீடு’ செய்து, ஒரு எல்பிஜி கேஸ் அடுப்பை வாங்கிக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவேன்.” என்று அப்போது அவர் ட்வீட் செய்திருந்தார்.

மஹிந்திரா’ ஏப்ரல் 2021 இல், இட்லி அம்மா பற்றி மீண்டும் ட்வீட் செய்தார், இந்த முறை அவருக்கு விரைவில் சொந்த, வீடும் பணியிடமும் கிடைக்கும், அங்கிருந்து அவள் இட்லிகளை சமைத்து விற்பாள் என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து, கமலத்தாள் பெயரில் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டது.

“பாட்டிமாவின் தேவைகளின் அடிப்படையில் வீட்டை வடிவமைக்க குழுத் தலைவர் அறிவுறுத்தியிருந்தார். வீட்டில், ஒரு பெட்ரூம், ஒரு டைனிங் பகுதி உள்ளது, அங்கு அவர் மக்களுக்கு இட்லிகளை பரிமாறலாம் மற்றும் சமையலறைக்கு திறந்த ஜன்னல் உள்ளது. குளியலறை மற்றும் கழிப்பறையுடன் இணைக்கப்பட்ட அறையும் உள்ளது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம்.

புது வீட்டின் சாவியை கையில் பெற்றுக் கொண்ட கமலத்தாள், “நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன், மஹிந்திரா அய்யாவிற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அடுத்த 10 ஆண்டுகளுக்கு மக்களுக்கு சேவை செய்ய முடியும். எனது கடைசி மூச்சு வரை விலையை உயர்த்த மாட்டேன். தமிழ் மாதமான வைகாசியில் என் வீட்டில் இருந்து வியாபாரத்தை நடத்த திட்டமிட்டுள்ளேன்.”என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.