இனி வீடுகள் இடிக்கப்பட்டால், கோவிந்தசாமி நகரில் புதிதாக கட்டப்படும் தொழிலதிபரின் குடியிருப்பில் மக்களை குடியேற்றம் செய்வோம். இதனால் வரக்கூடிய விளைவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்ளும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்த சாமி நகரில் சுமார் 259 வீடுகள் உள்ளது. பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்ட நிலையில், வீடுகளை இடிக்கும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவது எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் வசிக்கும் கண்ணையன் என்பவர் தீக்குளித்து அகாலமரணம் அடைந்தார். அதற்கு ஆறுதல் கூறுவதற்காக இன்று கோவிந்தசாமி நகருக்கு நேரில் வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் கண்ணையன் மனைவி சத்யாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே பாலகிருஷ்ணன், ’’ இங்குள்ள மக்களை அனாதைகளை போல, அகதிகளைப் போல நடத்தி இருக்கிறார்கள். நீர்நிலை புறம்போக்கு இடம் அல்ல; பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம். அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுப்பணித்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுவிட்டு தனி நபருக்காக மக்களை வெளியேற்றுகிறார்கள். அமைச்சர்கள் என்ன பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?
உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து மேல்முறையீடு செய்ய வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டு மக்களை வெளியேற்ற முடியும் என்றால் இங்கு அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் 10 லட்ச ரூபாய் அறிவித்தது போதுமானதல்ல, 50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இனி வீடுகள் இடிக்கப்பட்டால், கோவிந்தசாமி நகரில் புதிதாக கட்டப்படும் தொழிலதிபரின் குடியிருப்பில் மக்களை குடியேற்றம் செய்வோம். இதனால் வரக்கூடிய விளைவுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொள்ளும்” என்றார்.
கோவிந்த சாமி நகரில் குடியிருப்புகளை அகற்றும் பகுதியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார். பின்னர் அவர் அப்பகுதி மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பெண் ஒருவர் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அழுது புலம்பினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’கோவிந்தசாமி காலனியில் சுமார் 60 ஆண்டு காலமாக குடியிருந்த மக்களை அராஜக போக்கில் அகற்றி, தற்போது அனைத்து மக்களும் தெருவில் நிற்கும் அவலநிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது.
தனி நபருக்காக 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்றுவது எந்த வகையில் நியாயம்? ஒரு வருடத்தில் திமுக அரசு என்ன சாதனையை செய்துள்ளது? தமிழகத்தில் வாழ்கிற மக்கள் அகதிகளாக வாழ்கிற ஒரு நிலைமையை பார்க்கும்போது மிகவும் வேதனையளிக்கிறது. உண்மையான முதல்வராக இருந்தால் ஆர்.ஏ.புரம் மக்களை நேரில் சந்திக்க வரவேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
கோவிந்தசாமி நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட பின் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இவ்வளவு காலமாக எல்லா உரிமையும் இந்த பகுதி மக்களுக்கு கொடுத்துவிட்டு, தற்பொழுது எப்படி மக்கள் இருக்கும் இடத்தை இடிப்பார்கள்? ஒரு வியாபரிக்கு பிரச்னையாக இருக்கிறது என்று இந்த இடத்தை இடிக்கின்றனர். முதல்வர் மாற்று இடம் கொடுத்தாலும் இந்த இடத்திற்கு என்ன குறைச்சல்? இந்த இடம் ஆக்கிரமிப்பே கிடையாது. கோர்ட் நிறைய தீர்ப்பு கொடுக்கிறது. அதை அரசு செயல்படுத்தி இருக்கிறதா? தமிழக அரசு சார்பில் இந்த வழக்கை சரியாக பயன்படுத்தவில்லை. அரசு தானே இந்த இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளது.
சாஸ்த்திரா பல்கலைக்கழகத்தின் நிலத்தை கோர்ட் உத்தரவு படி இடித்தார்களா? இங்கே கேட்க ஆட்கள் இல்லை என்று இடிக்கிறார்களா? பாதி நீதி மன்றங்கள் நீரில்தான் கட்டப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்த வியாபாரி நிலமும் கபாலீஸ்வரர் கோவில் நிலம் என்றுதான் தெரிவிக்கிறார்கள். இதை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்ய வேண்டும். இவர்களுக்கு மாற்றாக பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம் என்று கொடுப்பது ஏற்புடையது அல்ல. முதல்வர் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM