சென்னை கல்லூரியொன்றில் கடந்த வாரம் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ), மிகவும் ஆபத்தான இயக்கம். இந்தியாவை சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிடுவதற்கு இந்த அமைப்பு ஆட்களை அனுப்பிவைத்திருக்கிறது. மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
தமிழக ஆளுநரின் இந்த பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பி.எஃப்.ஐ அமைப்பை தடை செய்யவேண்டும் என அஸ்ஸாம் சட்டமன்ற துணை சபாநாயகர் நுமல் மோமின் தற்போது கூறியிருக்கிறார்.
அஸ்ஸாமில் இன்று பேசிய நுமல் மோமின், “பி.எஃப்.ஐ அமைப்பு நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு, அதிலும் குறிப்பாக அஸ்ஸாமில் திட்டமிடல் நல்லதல்ல. எனவே பி.எஃப்.ஐ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருத வேண்டும். அதுமட்டுமல்லாமல், நமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, பி.எஃப்.ஐ அமைப்பை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கூறினார்.