புதுடெல்லி,
இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் வருகிற மே 23ந்தேதி தொடங்கி ஜூன் 1ந்தேதி வரை ஆசிய கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் போட்டியை நடத்தும் இந்தோனேஷியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், மலேசியா, கொரியா, ஓமன் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் பி பிரிவிலும் உள்ளன.
இதற்கான 20 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய ஆக்கி அணியை, ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவரான ருபீந்தர் பால் சிங் கேப்டனாக தலைமையேற்று வழி நடத்துவார். பைரேந்திரா லக்ரா துணை கேப்டனாக செயல்படுவார்.
சர்வதேச அளவில் வெவ்வேறு வயதினருடனான போட்டிகளில் பங்கேற்றுள்ள மூத்த, அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்கள் என கலவையான அணியாக உள்ளது என பயிற்சியாளர் கரியப்பா கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை 2022க்கான இந்திய ஆடவர் அணி விவரம்:
கோல்கீப்பர்கள்: பங்கஜ் குமார் ரஜக், சூரஜ் கர்கேரா.
தடுப்பு ஆட்டக்காரர்கள்: ருபீந்தர் பால் சிங் (கேப்டன்), யஷ்தீப் சிவாச், அபிஷேக் லக்ரா, பைரேந்திரா லக்ரா (துணை கேப்டன்), மன்ஜீத், திப்சன் திர்கி.
நடுகள வீரர்கள்: விஷ்ணுகாந்த் சிங், ராஜ் குமார் பால், மாரீஸ்வரன் சக்திவேல், ஷேஷே கவுடா, சிம்ரன்ஜீத் சிங்.
முன்கள வீரர்கள்: பவன் ராஜ்பர், அபரன் சுதேவ், எஸ்.வி. சுனில், உத்தம் சிங், எஸ். கார்த்தி.
மாற்று வீரர்கள்: மணீந்தர் சிங், நீலம் சஞ்சீப்.
காத்திருப்பு வீரர்கள்: பவன், பர்தீப் சிங், அங்கித் பால், அங்கத் பீர் சிங் ஆகியோராவர்.