சென்னை: தீக்குளித்து இறந்த ஆர்.ஏ.புரம் கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப் பெற்றது. அப்போது ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்து வருபவர்களை வெளியேற்றும் நிகழ்வின்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளித்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவையில் எதிரொலித்தது.
தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல்வழி ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கை வாசித்தார்.
முன்னதாக, சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது தொடர் பான விவாதத்தின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளைத் தொடர்ந்து பதில் அளித்தார். அப்போது, சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என கூறியதுடன், அவர்கள் மந்தைவெளி, மயிலாப்பூரில் வசிக்கும் வகையில் மாற்று இடம் வழங்கப்படும். மாற்று இடம் வழங்குவது குறித்து வரும் காலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் கூறியுள்ளார்.