கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட நாடு முழுவதும் நேற்று பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று மாலை பதவியை ராஜினாமா செய்தார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக உணவு வகைகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. நாள்தோறும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்திருப்பதால் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருள், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள், அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் கொழும்பு காலி முகத்திடலில் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் மாளிகை எதிரே அமைந்திருக்கும் காலிமுகத் திடலில் போராட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்து தங்கியிருந்தனர்.
இந்தச் சூழலில் நேற்று காலை கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களை தீ வைத்து எரித்தனர். ராஜபக்சவின் ஆதரவாளர்களும் போராட்டக்காரர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியானதால் கொழும்பு நகரம் முழுவதும் கலவரம் பரவியது. பல இடங்களில் வாகனங்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
காலிமுகத் திடல் கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணுவ வீரர்கள், திடலில் இருந்த போராட்டக்காரர்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றினர். ராணுவ தளபதி சவேந்திர சில்வா நேரடியாக களத்துக்குச் சென்று உத்தரவுகளை பிறப்பித்தார். அங்கு நடந்த கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
தலைநகர் கொழும்பு மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கலவரம் ஏற்பட்டது. கம்பகா மாவட்டம் நிட்டம்புவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த பொலன்நறுவை தொகுதி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரள, அங்கு சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் அவர்களை நோக்கி சுட்டதாகவும் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மக்கள், அவரையும் அவரது வாகனத்தையும் சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் எம்.பி.யும் அவரது கார் ஓட்டுநரும் உயிரிழந்தனர். எம்பி, கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் அவரது கார் ஓட்டுநர் கத்தியால் கழுத்தை தானே அறுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எம்.பி.யுடன் காரில் வந்த நபர்கள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
எம்.பி. மற்றும் அவரது ஓட்டுநரின் உயிரிழப்பை உறுதி செய்துள்ள போலீஸார், அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் கலவரம் பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மறுஉத்தரவு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் கவச வாகனங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கலவரத்தை வன்மையாக கண்டிக்கிறேன். தற்போதைய பிரச்சினைகளுக்கு கலவரம் மூலம் தீர்வு காண முடியாது. அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டுகிறேன். இந்த நெருக்கடியைத் தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என கூறியுள்ளார்.
அதிபரின் வேண்டுகோளை புறந்தள்ளிய மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். புத்தளம் ஆராய்ச்சிக்கட்டு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தின் வீடு, புறநகர் பகுதியான மொறட்டுவை நகர மேயர் சமன் லால் பெர்னாண்டோவின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதேபோல இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
போராட்டம் வலுத்துவரும் நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று மாலை தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, “நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக கலவரத்தை தூண்டி வருகின்றன. என்னை பொறுத்தவரை தாய் நாட்டுக்கே முதலிடம் அளிக்கிறேன். பொதுமக்களின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச நேற்று மாலை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளது. பதவி விலக மாட்டேன் என்று தொடர்ந்து கூறிவந்த மகிந்த ராஜபக்ச, மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ராஜினாமா செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்ப அரசியலுக்கு முடிவு
கடந்த 2005-ம் ஆண்டு முதல் இலங்கையின் தேசிய அரசியலில் ராஜபக்ச குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு தற்போது இலங்கை அதிபராக கோத்சபய ராஜபக்ச பதவி வகிக்கிறார். அவரது அண்ணன் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்தார்.
நிதித்துறை, வேளாண்மை, விளையாட்டு துறை அமைச்சர்களாக ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர்கள் பதவி வகித்தனர். மக்களின் போராட்டம் காரணமாக இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது மூத்த அண்ணன் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். நாட்டில் பதற்றத்தை தணிக்க ராஜபக்ச குடும்பத்தை சாராத புதிய பிரதமர், புதிய இடைக்கால அரசை நியமிக்க அதிபர் கோத்தபய திட்டமிட்டுள்ளார்.
இலங்கை சூழ்நிலை குறித்து அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூர்யா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ராஜபக்ச குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் கொழும்பு கலவரத்துக்கு காரணமான மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும். அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.