லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான மோனிகா தேவேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா உள்பட உலக நாடுகளின் முக்கிய பதவிகளில் இத்திய வம்சாவளியினர் அமர்ந்து வருகின்றனர். அதுபோல கூகுள், டிவிட்ட உள்பட இணையதளங்கள், பிரபல தொழில் நிறுவனங்களிலும் இந்தியர்கள் உயர்பதவிகளில் அமர்த்தப்பட்ட வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர்களே அதிக அளவில் வெளிநாடுகளில் கோலோச்சி வருகின்றனர். அமெரிக்க துணைஅதிபரான கமலா ஹாரிசும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷலினா டி குமார், அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுபோல நெதர்லாந்து தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஜ்தான் துகாலை, அதிபர் பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளிவழி பெண் மோனிகா தேவேந்திரன் இங்கிலாந்தில் புதிய பொறுப்புக்கு தேர்வாகி உள்ளார். இவர் இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி மகாணத்தில் வசித்து வருகிறார். அரசியலில் ஆர்வம் கொண்ட மோனிகா, ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலில் ஏம்ஸ்பரி மேற்கு பகுதி கவுன்சிலராக இருந்தார். இந்த கவுன்சிலுக்கான துணை மேயர் தேர்தல் நடந்தது. இதில் மோனிகா தேவேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து அவர் பிற கவுன்சிலர்களின் ஆதரவுடன் ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக தேர்வாகி பதவியேற்றுள்ளார்.
ஏம்ஸ்பரி பகுதிகளில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் இல்லை என கூறப்படும் நிலையில், மோனிகா தேவேந்திரனுக்கு இந்த பதவி கிடைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கூறிய மோனிகா தேவேந்திரன், ”எனது சொந்த ஊர் இந்தியாவின் சென்னை. நான் வேலை செய்த ஊர் லண்டன் . இதனால் இரண்டு ஊர்களும் எனக்கு முக்கியம். சென்னை, லண்டன் இரண்டும் எனக்கு இரு கண்கள். தற்போது இங்கிலாந்தில் உள்ள ஏம்ஸ்பரி டவுன் கவுன்சிலின் துணை மேயராக பதவியேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு முழுவதுமாக இங்கிலாந்து நாட்டினர் தான் உள்ளனர் தமிழர்கள் கிடையாது. . இருப்பினும் இங்கிலாந்தின் பிற இடங்களில் வசிக்கும் தமிழர்கள், சங்கத்தினர் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
இங்கிலாந்தில் எம்பியாக வேண்டும் என்பது எனது விருப்பம். மேலும், சொந்த ஊருக்கு வரவும் ஆவலாக இருக்கிறேன். இங்கு பணிகளை பூர்த்தி செய்துவிட்டு இந்தியா வந்து எனது வெற்றியை பகிர்ந்து கொள்வேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.