இது நம்முடைய உணவு இல்லை; ஷவர்மா சாப்பிடுவதை தவிர்க்கவும் – மா.சுப்பிரமணியன்

ஷவர்மா இந்திய உணவு இல்லை என்றும் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி இயக்கத்தை மேற்பார்வையிடும் போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன், மற்ற உணவுப் பொருட்கள் உள்ளன, மேலும் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி இயக்கத்தை மேற்பார்வையிட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் பேசுகையில், நிறைய உணவுப் பொருட்கள் உள்ளன. மேலும் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

“ஷவர்மா மேற்கத்திய உணவு. மேற்கத்திய நாடுகளின் தட்பவெப்ப நிலையில் கெடாமல் இருக்கும். அந்த பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு கீழே செல்லும். இறைச்சிப் பொருட்களாக இருந்தாலும், வெளியில் வைத்தாலும் கெட்டுப் போகாது. ஆனால், இங்கே அவை ஃப்ரீசரில் சரியான நிலையில் பராமரிக்கப்படாவிட்டால், அவை கெட்டுவிடும். அந்த கெட்டுப்போன பொருட்களை சாப்பிடுவதால் கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஷவர்மாவை மேற்கத்திய உணவு என்று கூறினாலும், ஷவர்மா ஒரு பிரபலமான மத்திய கிழக்கு தெரு உணவு என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளில் சரியாக பாரமரித்து வைப்பதற்கான வசதிகள் இல்லை என்றும், அவற்றை தூசி படியும் வகையில் வெளியில் வைத்திருப்பதாகவும், இளைஞர்களின் ஆர்வத்தால், பல கடைகளில் முறையான வசதிகள் ஏதுமின்றி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் மா. சுப்பிரமணியன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இந்த உணவு நமது தட்பவெப்ப நிலைக்கு பொருந்துமா என்று யாரும் யோசிப்பதில்லை. இந்த பொருட்களை விற்பனை செய்பவர்களும் இந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதற்கான ஏற்பாடு உள்ளதா என்று கவலைப்படுவதில்லை. அவர்கள் வணிக நோக்கில் மட்டுமே சிந்திக்கிறார்கள். இரண்டு, மூன்று புகார்கள் வந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள இந்தக் கடைகளை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். தேவையான வசதிகள் இல்லாத 1,000 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்று கூறினார்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மே 1 ஆம் தேதி ஷவர்மா சாப்பிட்ட 58 பேர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது, ஒரு சிறுமி உயிரிழந்ததையடுத்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்துக்கள் வந்துள்ளன. உணவகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ‘ஷவர்மா’ மாதிரிகளில் நோய்க்கிருமி சால்மோனெல்லா மற்றும் ஷிகெல்லா வைரஸ் கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.