திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (71). முன்னாள் பிஎஸ்என்எல் ஊழியர். அவரது மனைவி சியாமளா (62). இந்த தம்பதிக்கு பாக்யா என்ற ஒரு மகள் உண்டு. அவர் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாக அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் ஹரிதாஸ், சியாமளா ஆகியோர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சேர்த்தலா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் 2 பேரின் உடல்களிலும் மின் வயர்கள் சுற்றப்பட்டிருந்தது. விசாரணையில் அவர்கள் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.