என் உயிருக்கு ஆபத்து உள்ளது- மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி

மதுரை:

தருமபுர ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை வரவேற்று மதுரை ஆதீனம் மடம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசுகையில் கூறியதாவது:

“திருவையாறு நந்தி பெருமானின் 16 திருமுறைகளில் ‘ஆடும் பல்லக்கு’ இடம்பெற்று உள்ளது. இது நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வரும் மங்கள நிகழ்வு ஆகும். இதற்கு தமிழக அரசு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அனுமதி வழங்கி உள்ளது.

இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவை நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் அனைத்து மதத்தினருக்கும் சமய சம்பிரதாய கடமைகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அனைத்து மதத்தினரையும் தமிழக முதல்வர் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவைக்கு தமிழக அரசு தடை விதிக்க, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உந்துசக்தியாக இருந்தார். இதன் காரணமாகவே தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு நிகழ்வு உலக அளவில் பரவியது. இதற்காக திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் நடந்தது நடந்து விட்டது. இனி நடப்பது நல்லதாக அமைய வேண்டும். தருமபுரம் ஆதீனம் பல்லக்கு சேவைக்கு ஜியர் சுவாமிகள் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தார். அவருக்கு இந்த நேரத்தில் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சைவம், வைணவம் பேதமின்றி அனைவரும் எங்களுக்கு ஆதரவாக நின்றது மகிழ்ச்சி தருகிறது.

எனக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருகிறது. இதற்கு அரசியல் பின்புலமும் உள்ளது. ‘இது யாருக்கும் அடிபணியாத அரசு’ என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். எனவே அடுத்த ஆண்டு தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவை நடக்குமா? என்பது பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

‘நான் தருமபுரம் கோவிலுக்கு வரக்கூடாது’ என்று மிரட்டுகிறார்கள். இதனை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். எனக்கு கோவில்களில் அன்னதானம் வழங்க திரைமறைவில் தடை விதிக்கப்படுகிறது. எங்களுக்கு கோவில் நிர்வாகம் ஒத்துழைப்பு தருவதில்லை.

தமிழகத்தில் பிரபல கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக உள்ளேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு தரும் என்று நம்புகிறேன். பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு பற்றி அப்போது பேசலாம்.

சன்னியாசிகள் மத சடங்குகளை பின்பற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி நடக்கிறார்களா? என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறியதாக செய்தி தாளில் படித்தேன். நான் ஓட்டல்களில் சாப்பிடுவது இல்லை. சமைத்து தான் சாப்பிடுகிறேன். நான் கோவில் கோவிலாக பாதயாத்திரை போனவன் தான். கம்யூனிஸ்டுகள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.

தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக நான் இப்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ‘இது ஆன்மீக அரசு’ என்று தருமபுரம் ஆதீனம் தெரிவித்து உள்ளார். அது அவருடைய கருத்து. நான் இந்த விஷயத்தில் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.