புதுடெல்லி: இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எல்ஐசி ஐபிஓ இன்று நிறைவு பெறும் சூழலில் சிறு முதலீட்டாளர்களும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் அந்நிய முதலீட்டாளர்கள் ஒதுங்கியுள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனினும் உக்ரைன் – ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிவு காரணமாக பங்கு வெளியீடு தள்ளிப்போனது. பங்குச்சந்தை ஏற்ற – இறக்கமாக இருப்பதன் காரணமாக எல்ஐசியின் பங்கு வெளியீடு பாதிக்கப்படக் கூடும் என்பதால் மத்திய அரசு பங்கு வெளியீட்டை தாமதித்து வந்தது.
எல்ஐசி பங்குகளில் ஒரு பகுதியை விற்பதன் மூலம் சுமார் ரூ. 21,000 கோடி திரட்ட அரசு எதிர்பார்க்கிறது. பேடிஎம் ஐபிஓ 2021 இல் ரூ.18,300 கோடி திரட்டியது.
பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மே 4-ம் தேதி தொடங்கியது. இன்றுடன் நிறைவு பெறுகிறது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்படுகிறது.
மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படுகிறது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுவரை 1.79 மடங்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. பாலிசிதாரர்கள் தரப்பில் 5 மடங்கு விருப்ப விண்ணப்பங்களும், ஊழியர்கள் தரப்பில் 3.8 மடங்கும், சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 1.6 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிறுவன முதலீட்டாளர்கள், கோடிஸ்வர முதலீட்டாளர்கள் தரப்பில் 1.24 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
சில்லரை நிறுவன முதலீட்டாளர்கள் தரப்பில் 6.90 கோடி பங்குகளுக்கு 10.99 கோடி விண்ணங்கள் , அதாவது 1.59 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. பாலிசிதாரர்கள் தரப்பில் 5.04 மடங்கும், எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் 3.79 மடங்கும் விருப்ப மனுக்கள் வந்துள்ளன. எல்ஐசி ஐபிஓ விற்பனை இன்றுடன் முடிவதால், இன்னும் விருப்பமனுக்கள் அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் எல்ஐசி பங்கு விற்பனையில் பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர். அந்நிய முதலீட்டாளர்களர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதைக்கூட வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தவில்லை. இதற்கு மிக முக்கிய காரணம் தற்போது பங்குச்சந்தை ஆட்டம் கண்டு வருவது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தது. பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் பணவீக்க விகிதம் உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த மார்ச் மாதத்தில் 77-க்கும் கிழே சரிவடைந்தது.
இந்தியாவின் ‘அராம்கோ தருணம்’ என்று அழைக்கப்பட்ட நிலையில் உலகளாவிய சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவுதாகவும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் எண்ணுவதாக தெரிகிறது.
2019 ஆம் ஆண்டில், சவுதி அரேபியாவின் மாபெரும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ, உலகின் மிகப்பெரிய நிறுவனத்தில் 25.6 பில்லியனுக்கும் அதிகமாக நிதி திரட்டியது. சீன நிறுவனமான அலிபாபாவின் 2014 ஐபிஓ சாதனையை முறியடித்தது. இந்த ஐபிஓ சாதனையை எல்ஐசி முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.