மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் இன்று நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டதால் எந்த நெருக்கடியும் இன்றி விளையாடும். முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று, பல போட்டிகளின் முடிவு மற்றும் ரன்ரேட்டும் சாதகமாக அமைந்தால் ஒரு வேளை ‘பிளே-ஆப்’ சுற்று அதிர்ஷ்டம் அடிக்கலாம். மற்றபடி கொல்கத்தாவின் நிலைமை மோசமாகவே உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வீழ்ந்தால் வாய்ப்பு முற்றிலும் முடிந்து விடும் என்பதால் வாழ்வா-சாவா போராட்டத்துக்கு ஆயத்தமாகிறார்கள்.