சென்னை: கடந்த 2021 மே 1-ம் தேதி முதல் இதுவரை பெண்கள் உதவி எண் 181 மூலம் 11,778 உதவி அழைப்புகளும், குழந்தைகள் உதவி எண் 1098 மூலம் 15,246 அழைப்புகளும் பெறப்பட்டு அனைத்து அழைப்புகளுக்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்றும் நாளையும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு இத்துறைகளின் அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்: > தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொது இடங்களில் 466 விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் 42,359 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
> கடந்த 2021 மே 1-ம் தேதி முதல் இதுவரை பெண்கள் உதவி எண் 181 மூலம் 11,778 உதவி அழைப்புகளும், குழந்தைகள் உதவி எண் 1098 மூலம் 15,246 அழைப்புகளும் பெறப்பட்டு அனைத்து அழைப்புகளுக்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
> தமிழகம் முழுவதும் 800 பெண்கள் உதவி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு நிர்பயா நிதி மூலம் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் வாகனங்கள், கணினிகள் வழங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
> இப்பிரிவின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை புலன் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு, தமிழக காவல்துறை இயக்குநர் நிலையான புலன் விசாரணை வழிகாட்டியும், விசாரணை கையேடுகளும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு உரிய பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
> இப்பிரிவு அதிகாரிகளால் போக்சோ வழக்கு சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டு, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியதன் விளைவாக நடப்பாண்டில் பதிவான 723 பேக்சோ வழக்குகளில் 86 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது. மற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
> இப்பிரிவு அதிகாரிகளால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வது சம்பந்தமாக நுண்ணறிவு தகவல் சேகரிக்கப்பட்டு, அதன்பேரில், 2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
> இப்பிரிவின் தலைமையகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையதள குற்றப் புகார்களை கையாள இணையதள குற்ற காவல் நிலையம் செயல்படுகிறது.
> நடப்பாண்டில் 6000 இணையதள புகார்கள் மற்றும் 3072 குழந்தைகள் ஆபாச இணையதள புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
> தமிழக காவல்துறை சார்பில் 1542 குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு குழந்தைகள் தொடர்பான குற்றங்களைத் திறம்பட கையாண்டு வருகின்றனர்.
> பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சிறந்த சேவை புரிந்ததற்காக இந்திய அளவில் வழங்கப்படும் ஸ்காச் (SKOCH) விருதை இப்பிரிவு பெற்றுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.