கடும் எதிர்ப்பால் 10 நாள்களில் 2 உத்தரவுகளை திரும்பப் பெற்ற தமிழக அரசு!

சமீப நாள்களில், சாதாரணமாக கடந்து சென்றிருக்க வேண்டிய விஷயங்களில் தலையிட்டு பின்பு சர்ச்சையானதும் அதிலிருந்து பின் வாங்கிய சம்பவங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.

ஆளுநருடன் தருமபுர ஆதினம்

தமிழக அரசின் ஓராண்டு ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை கூட்டணி கட்சியினர் ஆதரித்தும், மின்வெட்டு, லாக்-அப் டெத் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வரும் நிலையில், அதையும் கடந்து ஓராண்டு வெற்றியை கொண்டாட நினைத்த தி.மு.க.வினரின் உற்சாகத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவுகள் அமைந்துள்ளது.

மதுரை ஆதீனம்

தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதை அனுமதிக்க கூடாது, அது மனித உரிமையை மீறும் செயல், மீறி அனுமதி அளித்தால் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் கழகத்தினர் மயிலாடுதுறை கலெக்டரிடம் மனு அளிக்க, அந்த மனுவின் அடிப்படையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து நோட்டீஸ் அனுபியது.

இந்த தடை உத்தரவால் அதிர்ச்சியான பல்வேறு ஆதீன மடங்களின் மடாதிபதிகள், இந்து அமைப்புகள், தருமபுர ஆதீன மடத்தை சுற்றியுள்ள கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அண்ணாமலை

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘நானே முன்னின்று தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவேன்’ என்றார்.

“பாரம்பரியாமக நடந்து வரும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை அரசு தடுக்கக் கூடாது. தடையை நீக்கவில்லையென்றால் உயிரைக்கொடுத்தாவது பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்துவோம்” என்று மதுரை ஆதீனம் அறிவித்தார். தமிழக அரசுக்கு எதிராக மன்னார்குடி ஜீயர் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்து மத நம்பிக்கையில் மட்டும் தி.மு.க அரசு தலையிடுவதாக பா.ஜ.க, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தனர்.

தருமபுர ஆதீனம்

இந்நிலையில் நேற்று மயிலம் பொம்மாபுரம் ஆதீனம், கோவை பேரூர் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். அதைத்தொடர்ந்து பட்டினப்பிரவேச நிகழ்ச்சி வழக்கம்போல் சிறப்பாக நடைபெறும் என்று ஆதீனங்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதித்தை தடையை திரும்ப பெற்றுகொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை கேள்விப்பட்டு ஆதீன பக்தர்களும் பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினரும் கொண்டாடி வருகிறார்கள்.

டீன் ரத்தினவேல்

இதைப்போலத்தான் சில நாள்ட்களுக்கு முன் மதுரை மருத்துவக் கல்லூரி புதுமுக மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றதாக எழுந்த புகாரில் எந்த விசாரணையும் நடத்தாமல் டீன் ரத்தினவேல் மீது ஏப்ரல் 1-ம் தேதி நடவடிக்கை எடுத்தது தமிழக அரசு.

“தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்த உறுதிமொழியைத்தான் வாசித்தார்கள். அப்படியே அது தவறு கருதினாலும் அதில் டீனின் பங்களிப்பு எதுவும் இல்லை, மிகவும் சிறப்பான மருத்துவ அதிகாரி” என்று அரசு மருத்துவர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், மருத்துவ மாணவர்கள் கூறினார்கள். இங்கு மட்டுமல்ல ஏற்கனவே தமிழகத்திலுள்ள பல மருத்துவக் கல்லூரிகளில் சமஸ்கிருத உறுதி மொழி ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்ட தகவலும் வெளியில் வந்தது.

அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியினர், கூட்டணிக் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்த்தனர்.

இதைத் தொடர்ந்து ஓரிரு நாள்கள் கழித்து தமிழக அரசு, டீன் ரத்தினவேலுக்கு அனைத்து தரப்பிலும் ஆதரவு இருப்பதும், அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியாத நிலையில், மீண்டும் அவரை மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக நியமித்து உத்தரவிட்டது.

கடந்த 10 நாள்களில் தமிழகத்தை பரபரப்பாக்கிய இந்த இரண்டு சம்பவங்களும் தமிழக அரசின் அவசரத்தை காட்டுவதாகவும், மக்கள் மத்தியில் கவனம் பெறாத, நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட்டு அது சர்ச்சையானதும் பின்வாங்குவதாக விமர்சிக்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.