புளோரிடா: அமேசான் ஊழியர் ஒருவரின் செயலைக் கண்டு தனது ரியாக்ஷனை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் வெளிப்படுத்தியுள்ளார். “நம் உலகத்தை கருணை மேம்படுத்துகிறது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு பொருட்களை டெலிவரி செய்யும் இ-காமர்ஸ் பணியையும் கவனித்து வருகிறது அமேசான் நிறுவனம். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்த்து வரும் அமேசான் பிரதிநிதியாக உள்ளார் அசானி ஆண்டர்சன். டிரைவரான இவர் ஃபுளோரிடா பகுதியில் பொருட்களை டெலிவரி செய்து வருகிறார். அப்படி அவர் அண்மையில் ஒரு வீட்டிற்கு பேக்கேஜை டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது அந்த பேக்கேஜ் உடன் மெசேஜ் ஒன்றையும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு தெரிவித்துவிட்டு வந்துள்ளார். அதுதான் ஜெஃப் பெசோஸ் கவனத்தைப் பெற்றுள்ளது.
அப்படி என்ன செய்தார் அசானி ஆண்டர்சன்?
ஃபுளோரிடாவில் உள்ள லேக்லேண்ட் பகுதியில் உள்ள ஹட்சன் குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டில் பேக்கேஜை டெலிவரி செய்ய சென்றுள்ளார் அசானி. அந்த வீட்டில் உள்ள 8 வயது சிறுமி அவுப்ரே ஹோப் ஹட்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. இந்நிலையில், அண்மையில் அவுப்ரே வீட்டுக்கு பொருட்களை டெலிவரி செய்ய சென்றபோது மெசேஜ் செய்துவிட்டு வந்துள்ளார்.
“அவுப்ரே… உனக்காக அமேசான் பிரார்த்திக்கிறது. லவ் யூ” என சாக்பீஸ் கொண்டு சிறுமி வீட்டு வாசலில் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார் அசானி. அதனை கவனித்த சிறுமியின் தாயார் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கியுள்ளார். அதோடு செக்யூரிட்டி கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பல வியூஸ்களை பெற்றுள்ளது.
இதுதான் பெசோஸ் கவனத்திற்கு சென்றுள்ளது. “கருணை… நம் உலகத்தை மேம்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார் அவர். இதனை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்திருந்தார். மேலும் சிறுமி அவுப்ரேவுக்கு அன்பையும், பிரார்த்தனையையும் பகிர்ந்துள்ளார்.