கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பலர் இப்போது வீட்டிலிருந்தே வேலை செய்யப் பழகிவிட்டனர். இப்போது தொற்று குறைந்து வருவதால் பல நிறுவனங்கள் அலுவலகம் வருமாறு ஊழியர்களை அழைத்து வருகின்றனர்.
பல ஊழியர்கள் வரத்தில் சில நாட்கள் அலுவலகம் வந்தும், ஓர் இரு நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்யக் கூடிய ஹைப்பிரிட் முறையில் அலுவலகம் வரலாமா என கேட்கின்றனர். ஹைபிரிட் முறை வேண்டும், இல்லை என்றால் வேலை வேண்டாம் என பல நிறுவனங்களில் ஊழியர்களின் வெளியேற்றம் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் பலர் சொந்தமாகத் தொழில் தொடங்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.
எனவே குறைந்த செலவில் சிறுதொழில் தொடங்கக் கூடிய சூப்பரான 7 ஐடியாக்களை இங்குப் பார்ப்போம்.
சுத்தப்படுத்தும் சேவை
உங்களுக்கு எப்போதும் வீடு சுத்தமாக இருந்தால் பிடிக்கும். கொஞ்சம் தூசி இருந்தால் கூட அதை சுத்தம் செய்பவரா? அழுக்கு நாற்றம் பற்றி எல்லாம் கவலை இல்லாமல் சுத்தம் செய்பவரா நீங்கள். உங்களுக்கு ஏற்ற சிறு தொழில் சுத்தப்படுத்தும் சேவை.
சுத்தப்படுத்தும் சேவை என்றால் அது கழிவறை மட்டுமல்ல. வீடு, சோஃபா, வாகனம், சுவர் என பல்வேறு சுத்தப்படுத்தும் சேவையை நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உதாரணத்துக்கு நீண்ட நாட்கள் வெளியூர் பயணம் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பும் போது, வீடு தூசியும் அழுக்குமாக இருக்கும். பயணம் செய்த கலைப்பில் அதை சுத்தம் செய்ய பலர் கஷ்டப்படுவார்கள் இவர்கள் வீட்டை சுத்தம் செய்ய சேவைகளை நாடுவார்கள்.
அதிலும் கார் பயணம் சென்று வருபவர்கள், வெளியூர் செல்லும் முன்பும், சென்று வந்த பிறகும் தங்கள் வீட்டிற்கே வந்து காரை வாட்டர் வாஷ், சானிடைசிங், பாலிஷ் உள்ளிட்ட சேவையைச் செய்து தரும் சேவைகளை விரும்புகின்றனர். எனவே இப்போது இது ஒரு வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழிலாக உள்ளது.
ஃப்ரீலன்ஸ் மொழி பெயர்ப்பு, எழுதுதல்
உங்களுக்கு உங்கள் தாய் மொழி அல்லது பிற மொழிகளில் நன்றாக எழுதும் திறமை உள்ளதா? அப்படியானால் ஃப்ரீலான்ஸ் மூலம் நீங்கள் கட்டுரைகளை எழுதி தந்து பணம் சம்பாதிக்கலாம். அதற்கு உங்களுடன் ஒரு இணைய இணைப்பும், மடிக் கணினியும் இருந்தால் போது.
மேலும் உங்களுக்கு ஒரு மொழியிலிருந்து வேறு மொழிக்கு மொழி பெயர்க்கும் திறன் இருந்தால் அவர்களுக்கும் அதிக ஃப்ரீலான்ஸ் வாய்ப்புகள் உள்ளன.
அமெசான் கிண்டல்
உங்களுக்கு ஏதேனும் ஒரு மொழியில் நன்றாக எழுதும் திறமை உண்டா. உங்களால் ஒரு புத்தகத்தைத் தனி ஆளாக எழுத முடியுமா. அமேசான் நிறுவனத்தின் கிண்டல் சேவையில் நீங்களே சொந்தமாகப் புத்தகத்தை எழுதி வெளியிடலாம். இதை அமேசான் கிண்டல் பயனர்கள் பதிவிறக்கம் செய்து படிக்கும் போது அதற்கான கட்டணம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பிளாகிங்
வீட்டில் வேலையில்லாமல் பொழுதுபோக்கத் தெரியாமல் எழுதும் திறமையுடன் இருப்பவர்கள் பிளகிங் மூலம் கட்டுரைகளை எழுதி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இதற்கு நீண்ட கால பொறுமை வேண்டும்.
சொத்து மேலாண்மை
வேகமாக வளர்ந்து வரும் நகரப்பகுதிகளில் வேலைக்காக வரும் பலர் சொந்தமாக வீடு வாங்கிவிடுவார்கள். பின்னர் வேலை மாற்றம் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். இவர்களில் பலர் இந்த வீடுகளைப் பராமரிக்கவும் அவற்றின் மூலம் ஒரு வருவாயை ஏற்படுத்திக்கொள்ளவும் சொத்து மேலாண்மை நிறுவனத்தை நாடுவார்கள்.
இவர்கள் அதற்கான ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டு அந்த வீட்டை பராமரிப்பது, வாடகைக்கு விடுவது போன்றவற்றைச் செய்வார்கள். மேலும் அப்படி வரும் வருவாயில் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு வீட்டின் உரிமையாளரிடம் ஒப்படைப்பார்கள். இப்படி வீடு, சொத்துக்கள் போன்றவற்றைப் பராமரிக்கும் சேவை நகரப்பகுதிகளில் வேகமாக இப்போது வளர்ந்து வருகிறது.
உணவு டெலிவரி சேவை
ஒருவருக்கு ஹோட்டல் அல்லது உணவகம் தொடங்கும் அளவிற்கு முதலீடுகள் இல்லை என்றாலும் ஆன்லைன் மூலம் வீட்டிலேயே உணவைத் தயாரித்து அவற்றை டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலம் விற்று பணம் பார்க்கலாம். நீங்கள் உள்ளது சிறுநகரம் என்றால் உங்கள் வீட்டின் அருகில் உள்ள கொரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி இப்படி ஒரு சேவை வழங்கி பலருக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கலாம்.
சமூக ஊடக மேலாண்மை சேவை
இன்றைய டிஜிட்டல் உலகில் பலர் யூடியூப் சேனல் தொடங்குவது, இணையதளம் தொடங்கி வணிகம் செய்வது என பல்வேறு தொழில்களைத் தொடங்குகின்றனர். ஆனால் அதை அவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் எப்படி பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது என தெரிவதில்லை. சமூக வலைத்தளங்களை திறம்பட நிர்வகிக்க உங்களுக்குத் தெரியும் என்றால் இது போல நபர்களை அணுகி அவர்களது சமூக வலைத்தள கணக்குகளை நிர்வகிக்கக் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகப் பெறலாம்.
பொறுப்பு துறப்பு
கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு கிரேனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ், ஆசிரியர் பொறுப்பல்ல. Tamil.Goodreturns.in பயனர்கள் எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களுடன் சரிபார்க்க அறிவுறுத்துகிறது.
7 Unique Small Business Ideas to Try in 2022
7 Unique Small Business Ideas to Try in 2022 | குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்க டாப் 7 ஐடியா!