கூண்டுக்குள் அம்பேத்கர், பெரியார்.. வசனங்களால் நெஞ்சைச் சுடும் ’நெஞ்சுக்கு நீதி’ ட்ரெய்லர்

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்தியாவையே உற்றுநோக்க வைத்த ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் தமிழில் உதயநிதி நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இப்படத்தினை போனி கபூர் தயாரித்துள்ளார். நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். ’பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டரும் டீசரும் வெளியாகி கவனம் ஈர்த்தது. வரும் மே 20 ஆம் ’நெஞ்சுக்கு நீதி’ வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.

“எல்லோரும் சமம்னா யாரு சார் ராஜா?” என்று தொடங்கும் ட்ரெய்லர், “எல்லோரும் சமம்னா யாரு ராஜா ஆகிறது?” என்ற கேள்வியுடனேயே நிறைவடைகிறது. இரண்டு நிமிட ட்ரெய்லரில் இரண்டுமுறை வரும் இந்தக் கேள்வியின்போது சட்டப்புத்தகத்துடன் இருக்கும் அம்பேத்கர் சிலை காட்டப்படுகிறது. எல்லோரும் சமம் என்றால் அதிகாரம் செய்யும் ராஜாக்களுக்கு இங்கு வேலையில்லை. மக்கள்தான் ராஜா. சட்டம்தான் ராஜா. ஜனநாயகம்தான் ராஜா என்பதை அம்பேத்கர் சிலையும் கையில் இருக்கும் சட்ட புத்தகமும் குறியீடாய் நமக்கு உணர்த்துகிறது.

“நம்மளை இங்க எரிக்கத்தாண்டா விடுவாங்க எறிய விடமாட்டாங்க” போன்ற வசனங்கள் இன்னமும் சாதிக்கொரு சுடுகாடு என்றிருக்கும் ஆதிக்க மனப்பான்மையை சுட்டெரிக்கிறது.

’அவங்கக் குளிச்சி அழுக்காகாதத் தண்ணி நாங்கக் குடிச்சா அழுக்காகுமா சார்?”…”நீ ஆக்குன சோத்தை எங்க வூட்டு பசங்க சாப்பிடணுமாக்கும்? அதை உங்க வூட்டு பன்னிகளுக்கு போடுறதோட நிறுத்திக்கோ”… ”செத்தது ரெண்டு தலித் பொண்ணுங்க விசாரணை நேர்மையா இருக்கும்ங்களா?” போன்ற வசனங்களும் காட்சிகளும் பட்டியலின மக்கள் படும் துயர சாட்சியாய் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், ”அவங்கவங்களை அவங்க இடத்துல வைக்கணும் சார்” என்று வரும் வசனத்தின்போது கூண்டில் அடைப்பட்ட அம்பேத்கர் சிலை காட்டப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு, உலகிலேயே நீண்ட அரசியல் சாசனம், அதுவும், உலகிலேயே ‘சமூக நீதி’ என்னும் வார்த்தை இருக்கும்படி அரசியல் சாசனமியற்றியவரும் இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சருமான அம்பேத்கர் கூண்டில் அடைப்பட்டுக் கிடக்கவேண்டியவரா? என்பதையும் காட்சிகளாலேயே பொது சமூகத்தினரின் மனதை துளைத்தெடுக்கிறது.  கூண்டில் அடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையுடன் பெரியார் சிலையும் அடைக்கப்பட்டு சமீபத்திய நிகழ்வுகளை கண்முன் நிறுத்துகின்றன. 

image 

இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் பட்டியலின மக்கள் படும் துயரங்களை கடந்துபோகும் ஒரு காட்சிகளாகவோ அல்லது ஒரு சம்பவத்தை மையப்படுத்தியோதான் வந்துள்ளன. ஆனால், ‘நெஞ்சுக்கு நீதி’யின் ஒவ்வொரு காட்சிகளும் சாதிக்கொடுமைகளின் வெவ்வேறு வடிவங்களை ஆவணப்படுத்தியுள்ளது. அது, சாதிய ஆணவக்காரர்களின் நெஞ்சை குத்திக் கிழிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, ஒரு ட்ரெய்லரிலேயே சாலையில் சட்டப்புத்தகத்துடன் அம்பேத்கர், கூண்டுக்குள் அடைபட்ட அம்பேத்கர், நீதி வழங்கும் காவல்நிலைய சுவற்றில் அம்பேத்கர் என மூன்றுமுறை அம்பேத்கரின் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன.

அம்பேத்கர் நிறைந்த இப்படியொரு ட்ரெய்லர் தமிழ் களத்திற்கு புதிது. ’ஆர்டிகிள் 15’  ரீமேக் என்பதாலும் கதைக்களமே அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் வழியே வழங்கப்படும் நீதி என்பதாலும் துணிச்சலாகவும் நேர்மையுடனும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.