வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங் -கொரோனா பரவலை தடுக்க, ஷாங்காய் உள்ளிட்ட தொழில் நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலானதால், சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜன., – மார்ச் காலாண்டில், சீனாவின் பொருளாதாரம், 4.8 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில், பணவீக்கம், வட்டி விகித உயர்வு போன்றவற்றால், சீனப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், சீனாவின் ஏற்றுமதி மிதமான அளவிற்கே உள்ளது.ரியல் எஸ்டேட் துறை மீதான கட்டுப்பாடுகளால், கட்டுமானப் பொருட்களுக்கான தேவை சரிவடைந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, ஷாங்காய் உள்ளிட்ட சில தொழில் நகரங்களில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், தொழில் துறையின் வளர்ச்சி தேக்கம் கண்டுள்ளது. இறக்குமதி குறைந்ததால் மூலப் பொருட்கள் கிடைக்காமல், பல தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன.
சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உலகில், அதிக சரக்குகளை கையாளும் ஷாங்காய் துறைமுகத்தின் அன்றாட வர்த்தகம், 30 சதவீதம் சரிவடைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், நடப்பு ஏப்., – ஜூன் காலாண்டிலும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.
Advertisement