வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி,-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் நிதியில் முறைகேடு செய்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஜார்க்கண்ட் சுரங்கத் துறை செயலர் பூஜா சிங்காலுக்கு, அமலாக்கத்துறை, ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இங்கு இளநிலை பொறியாளராக பணியாற்றிய ராம் வினோத் பிரசாத் சின்ஹா என்பவர், குந்தி மாவட்டத்துக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் பல்வேறு முறைகேடுகளை செய்தார். இதில் கிடைத்த பணத்தை தன் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் முதலீடு செய்தார்
. இந்தப் புகாரில் சிக்கி பதவி இழந்த ராம் வினோத்தை, அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முறைகேடு செய்த பணத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு 5 சதவீதம் கமிஷன் கொடுத்ததாக கூறினார்.அப்போது குந்தி மாவட்ட கலெக்டராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா சிங்கால், தற்போது சுரங்கத்துறை செயலராக உள்ளார்.
இதையடுத்து, அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில் 19 கோடி ரூபாய் பிடிபட்டது.இந்நிலையில், பூஜா சிங்காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
Advertisement