புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி அலுவல் மொழி விவகாரம் குறித்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பொதுவாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவல் ரீதியான பயன்பாட்டிற்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கையை புதுச்சேரி ஜிம்பர் இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
அதாவது, மத்திய அரசு அலுவலகங்களின் பதிவேடு மற்றும் கோப்புகளில் இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், இனி வரும் காலத்தில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவை இணையத்தில் பலரும் சாடி வருகின்றனர். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையில் முயற்சி தான் இது என்றும், இதனை அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், இது குறித்து திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., ஜிப்மர் இயக்குநரின் உத்தரவை திரும்பிப் பெற வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக போராட்டம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவனை இயக்குநர் ராகேஷுடன், துணை நிலை ஆளுநர் தமிழிசை ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எந்த நேரத்திலும் இந்தி திணிப்பு இல்லை என்று கூறினார்.
நிர்வாகரீதியான உத்தரவு, திணிப்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்த அவர், ஜிப்மரில் தமிழ் பிரதானப்படுத்தப்படும் என்றும், மக்களுக்கான தொடர்பு தமிழில்தான் இருக்கும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மரில் இந்திமொழி திணிப்பு இல்லை, நிர்வாக நடவடிக்கைக்கு தேவையானவற்றுக்கு மட்டுமே இந்தி பயன்படுத்தப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்தப்பின் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM