மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை தொடக்க வீரர் டெவன் கான்வே அதிரடியால் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய அவர் 49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 3-வது முறை அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த சீசனில் சென்னை அணியின் தொடக்க போட்டியில் கான்வே-விற்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் சோபிக்காத காரணத்தால் அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பின்னர் கடைசி 3 போட்டிகளில் அவரை அணி நிர்வாகம் களமிறக்கியது. அவரும் தன்னை நிரூபித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முஹமது கைப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெவன் கான்வே குறித்து அவர் கூறுகையில், ” கான்வே ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு பிளேயிங் 11-ல் இருந்து கைவிடப்பட்டார். ஆனால் அவர் தற்போது பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து சென்னை அணி அவரை முன்பே இறக்காமல் இருந்ததற்காக வருத்தப்படுவார்கள். அணியின் சிறந்த வீரரை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை.
கான்வே ஒரு கிளாஸ் பிளேயர். அவர் 360-ஆங்கிள் ஷாட்களை விளையாடுகிறார். மேலும் அவர் எந்த வகையான ஸ்ட்ரோக்கை விளையாடப் போகிறார் என்பதை பந்துவீச்சாளரால் கணிக்க முடியவில்லை” என கைப் தெரிவித்தார்.