மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’ படம் ஆங்கில சப் டைட்டுலுடன் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் மகேஷ் பாபு. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. குறிப்பாக, ‘கலாவதி’ பலரின் ஃபேவரிட்டாக உள்ளது. வரும் மே 12 ஆம் தேதி ‘சர்காரு வாரி பாட்டா’ தெலுங்கு மொழியில் மட்டுமே தியேட்டர்களில் வெளியாகிறது.
சமீபத்தில், ‘புஷ்பா’, ‘ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட தெலுங்குப் படங்கள் தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகி வசூலைக் குவித்தது. ‘புஷ்பா’ வெளியானபோது ‘ரைட்டர்’, ‘83’ படங்களின் வசூலைப் பாதித்தது குறிப்பிடத்தக்கது. இப்போதும், ’ஆர்ஆர்ஆர்’ படம் ‘பீஸ்ட்’, ‘கேஜிஎஃப் 2’ படங்களுக்கு இணையாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தளவிற்கு தெலுங்குப் படங்களுக்கு தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். ஹவுஸ்ஃபுல் காட்சிகளும் வசூலுமே இதற்கு சாட்சி. இப்படியொரு நிலையில், தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’ தெலுங்கு மொழியில் மட்டுமே வெளியாவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால், படக்குழுவினர் ஆங்கில சப்-டைட்டிலுடன் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் “தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கிறது. அதனால், ஆந்திரா மற்றும் தெலங்கானா தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் ஆங்கில சப்-டைட்டிலுடன் ’சர்காரு வாரி பாட்டா’வை பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.