சென்னை: தமிழகத்தில் 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்துள்ளதாக காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்றும் நாளையும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு இத்துறைகளின் அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 15,000 பேர் மரணம் அடைந்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, “தமிழகத்தில் 2022 ஜன.1-ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் சுமார் 3.19 கோடி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 2021-ஆம் ஆண்டில் மட்டும் 14.60 லட்சம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2021-ம் ஆண்டில் 55,682 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 15,384 பேர் உயிரிழந்துள்ளனர், 55,996 பேர் காயமடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து நடந்த இடத்தை விரைவாக சென்றடையவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் உதவவும் 304 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன. நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்ட திறமையான “கோல்டன் ஹவர்” மேலாண்மை காரணமாக 2021-ம் ஆண்டில் நடைபெற்ற 22,394 விபத்துகளில் 14,865 விபத்துகள் உடனடியாக கையாளப்பட்டு விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் கணிசமாக இந்த வாகனங்கள் பங்களிப்பை அளித்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளை குறைப்பதற்கான செயல் திட்டம்:
> மண்டலம் மற்றும் மாவட்டம் வாரியாக அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை நேரில் பார்வையிட்டு விபத்து நிகழா வகையில் நடைவடிக்கை.
> மாவட்ட, மாநகரங்களில் மாதம்தோறும் சாலைப் பாதுகாப்பு கூட்டங்கள் நடத்தப்படும்.
> முக்கிய சாலைகளில் சாலைப் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும்’