சென்னை: திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் கொடுத்த தகவல்படி 467 ரவுடிகளை கைது செய்துள்ளதாகவும், ஏராளமான ஆயுதங்கள் , புகையிலை, கஞ்சா, 9000 லிட்டர் கலப்பட டீசல், 366 டன் ரேஷன் அரிசி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு துறைகளின் அமைச்சரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். தமிழக காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (Organised Crime Investigation Unit) தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:
ரவுடிகளின் நடவடிக்கைகள்
> கடந்த வருடத்தில் (2021) உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்பான 1,400 எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் 467 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 206 நபர்களிடம் குற்றவியல் விசாரணை சட்ட விதிகளின் 107/110 கீழ் நன்னடத்தைப் பத்திரம் பெறப்பட்டது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 பேர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.
> பிணையில் வெளிவர முடியாத 98 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன. 42 புதிய அழைப்பாணைகள் வழங்கப்பட்டன. 75 ரவுடிகள் மீதான வரலாற்றுப் பதிவேடுகள் துவக்கப்பட்டன.
ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள்:
> கடந்த வருடத்தில் சுமார் 224 குறிப்பாணைகள் நகரங்களுக்கும் மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
> திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர், 11 எஸ்பிஎம்எல் துப்பாக்கி, 3 ஏர்கன், 2 பெரிய அளவிலான ரவை குண்டுகள், 27 நாட்டு வெடிகுண்டுகள், 1513 வெடிமருந்து எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 3405 ஸ்லர்ரி, 6 உந்து விசைகள், 500 கிராம் பால்ரஸ், 50 சிறிய தோட்டாக்கள், 2.5 கிலோ கரிபுவுடர், 6 கிலோ வெள்ளை பாஸ்பரஸ், 200 கிராம் துப்பாக்கி பவுடர், 2 மூட்டைகள் ப்யூஸ் ஆகியவற்றை சமூக விரோதி மற்றும் ரவுடிகளிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
> புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா பறிமுதல்:
கடந்த 2021-ம் ஆண்டில், திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினரால், 1,56,170 ரூபாய் மதிப்பிலான 36,199.95 கிலோ புகையிலைப் பொருட்கள், 69.92 லட்சம் மதிப்பிலான 699.25 கிலோ கஞ்சா ஆகியவை பல்வேறு நகரங்கள், மாவட்டங்களிலிருந்து கைப்பற்றப்பட்டன.
> திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினரின் ரகசிய தகவலின் பேரில், ரூ.13.13 கோடி மதிப்பிலான 13,129.72 கிலோ கஞ்சாவும், ரூ.1.05 கோடி மதிப்பிலான 10,842 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஆகியவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
> கலப்பட டீசல்: திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் கொடுத்த தகவல்படி 3 குற்றவாளிகளை, சட்டத்திற்கு புறம்பாக கலப்படம் செய்யப்பட்ட 9000 லிட்டர் டீசலை வைத்திருந்த குற்றத்திற்காக குற்றப்புலனாய்வு துறையினர் கைது செய்தனர். மேலும் டேங்கர் லாரி மற்றும் இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
>ரேஷன் அரிசி: திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் உதவியுடன் 366 டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 75 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 22 இருசக்கர வாகனங்கள், 8 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 42 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.