தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை- 4 பேரிடம் தீவிர விசாரணை

மும்பை:
மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக இவன் செயல்பட்டான். தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பாதுகாப்பாக தங்கி இருக்கிறான். அவன் அங்கிருந்து கொண்டு பல்வேறு சட்ட விரோத செயல்களை தனது கூட்டாளிகள் மூலம் செய்து வருகிறான்.
2003ம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்காவில் தாவூத் இப்ராகிம் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான். அவனது தலைக்கு ரூ.193 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீதான பயங்கரவாத வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. யூ.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே பல சோதனைகளை நடத்தி இருந்தனர்.
இந்த நிலையில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளின் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பாந்த்ரா, நாக்பாடா, போரிவிலி, கோரேகான், பரேல், சாந்தாகுரூஸ் ஆகிய பகுதிகளில் உள்ள துல்லியமாக துப்பாக்கி சுடுபவர்கள், போதை கடத்தல்காரர்கள், ஹவாலா செயல்பாட்டாளர்கள், தாவூத் இப்ராகீமின் ரியல் எஸ்டேட் மேலாளர்கள் மற்றும் குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் முக்கிய நபர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மும்பையில் மொத்தம் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
தாவூத் இப்ராகீமின் கம்பெனியோடு தொடர்பு உள்ளவர்களிடம் தான் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 
மேலும், ஹாஜி அலி தர்கா மற்றும் மாகிம் தர்காவின் அறங்காவலர், சோட்டா ஷகீலின் உறவினர் சலீம் ப்ரூட் உள்பட 4 பேரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.