சென்னை: திட்ட அனுமதியில் கவுன்சிலர்கள் தலையிட்டு லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கவுன்சிலர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கவுன்சிலர்கள் பலர், வீட்டு உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறும் நோக்கில், திட்ட அனுமதிக்கு பணம் பெறுவது, விதிமீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பதற்கு லஞ்சம் பெறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்படுகிறது.
கடந்த மாதம், வட சென்னை பெண் கவுன்சிலரின் கணவர் கட்டுமான பணிக்கு லஞ்சம் கேட்பதாக எழுந்த புகார் எழுந்தது. இதுபோன்று பல்வேறு பகுதிகளிலும், கவுன்சிலர்கள் லஞ்சம் பெறுவது அதிகரித்துவரும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி திட்ட அனுமதியில் கவுன்சிலர்கள் தலையிட்டு லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “கட்டட அனுமதி மற்றும் விதிமீறிய கட்டடங்கள் விவகாரங்களில் கவுன்சிலர்கள் தலையீடு இருக்காமல் பார்த்துக்கொள்ளும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து கவுன்சிலர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையும் மீறி கட்டட அனுமதி, விதிமீறிய கட்டடங்களுக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் செயல்பட்டால், அவர்களது பட்டியல் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, கவுன்சிலர்கள் விதிமீறல்களில் ஈடுபடாமல், தங்களது பணியை மட்டும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.