திருச்சூர் பூரம் விழாவின் மாதிரி வாணவேடிக்கை நிகழ்ச்சி- முதல் முறையாக நடத்திய பெண் ஒப்பந்ததாரர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திருச்சூர் வடக்குநாதன் கோவிலும் ஒன்று.

இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள மேட மாதத்தின் பூரம் விழா நடைபெறும். இந்த விழாவின்போது நடைபெறும் யானைகளின் அணிவகுப்பு மற்றும் வாண வேடிக்கையை காண வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக திருச்சூர் பூரம்விழா பக்தர்களின்றி நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பக்தர்கள் பங்கேற்புடன் நடக்கிறது.

மேலும் வாண வேடிக்கை நடத்தவும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நாளை மாலை கோவிலில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான மாதிரி வாணவேடிக்கை நேற்று நடந்தது.

முதலில் பரமேக்காவு தேவஸ்தானம் சார்பில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. தொடர்ந்து திருவம்பாடி தேவஸ்தானம் சார்பில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. .

வாண வேடிக்கையை பார்க்க வந்த பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும் கோவில் அருகே உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் மக்கள் திரண்டு நிற்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.

அதோடு கோவில் அருகே உள்ள பழமையான வீடுகளின் மீது ஏறிநின்று பார்க்கவும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த முறை திருச்சூர் பூரம் வாணவேடிக்கை நிகழ்ச்சியில் திருவம்பாடி தேவஸ்தானத்தின் வாணவேடிக்கையை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை குண்டனூரை சேர்ந்த ஷீனா சுரேஷ் என்ற பெண் பெற்றிருந்தார்.

கோவிலில் இருந்து இப்போதுதான் பெண் ஒருவருக்கு வாண வேடிக்கை நடத்தும் ஒப்பந்தம் முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை பெற்ற ஷீனா சுரேசின் முதல் கணவர் சுந்தரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் வாண வேடிக்கையின்போது நடந்த பட்டாசு விபத்தில் இறந்து விட்டார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரின் சகோதரர் சுரேசை ஷீனா திருமணம் செய்து கொண்டார். அவர் ஷீனாவை மீண்டும் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட உதவி புரிந்தார். மேலும் அவருக்கும் இதில் அனுபவம் இருந்ததால், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாண வேடிக்கை நடத்தும் நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

தற்போது திருச்சூர் பூரம் விழாவில் வாணவேடிக்கை நடத்த ஷீனா மனு செய்திருந்தார். அவரது ஒப்பந்தத்தை கோவில் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் கோவிலில் வாண வேடிக்கை நடத்தும் முதல் பெண் என்ற பெருமையை ஷீனா பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.