புதுடெல்லி: தேசத்துரோக சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 124ஏ சட்டப்பிரிவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கிறது. இது அரசுகளால் தவறாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறி எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா மற்றும் ஏராளமான பொதுநல அமைப்புகள் மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 5ம் தேதி பதிலளித்த ஒன்றிய அரசு, ‘‘இந்த சட்டப்பிரிவை செயல்படுத்தும் விதத்தில் தான் தவறு நடக்கிறது என்பதால் ஒட்டுமொத்த தேச துரோக சட்டத்தையே ரத்து செய்ய முடியாது’’ என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தேச துரோக வழக்குகளை பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளின் விதிகளை மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு முடிவெடுக்கும் வரை நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டாம். மேலும் தேச துரோக வழக்குகளால் பிரச்னையை சந்திக்கும் சிவில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பற்றிய கவலைகளையும் பரிசீலிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் அரசு உறுதியாக இருக்கிறது. இதில் 75வது சுதந்திர தின விழாவை ஒட்டி தேவையில்லாத, காலவதியான சட்டங்கள், காலணி ஆதிக்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் ஆகியவை கைவிடப்படும் என பிரதமர் பேசியதை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.