பிரபல பாலிவுட் நடிகரான அம்ஜத் கான் (Amjad Khan) 1975-ல் அமிதாப் பச்சன் நடித்த ஷோலே (Sholay) என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இவருக்கு ஷைலா கான் என்ற மனைவியும் ஷதாப் கான், அஹ்லம் கான், சீமாப் கான் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
1940-ல் பிறந்த இவர் பல படங்களில் நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றி பாலிவுட் திரையுலகில் பிரபலமானவர். இவர் தனது 52வது வயதில்1992-ல் காலமானார், பின்னர் இவரது மனைவி ஷைலா கான் அதே ஆண்டு காலமானார். தற்போது அம்ஜத் கானின் மகன் ஷதாப் கானும் பாலிவுட்டில் பிரபல நடிகராக வளம் வருகிறார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்ட ஷதாப் கான் தன் தந்தை அம்ஜத் கான் குறித்தும் அவரது ஆரம்ப கால வாழ்க்கைக் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், தன் தந்தை அம்ஜத் கான் முதன் முதலில் ‘ஷோலே’ (Sholay) படத்தில் வில்லன் காதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யபட்டபோது தான் (ஷதாப் கான்) பிறந்து மருத்துவமனையில் இருந்ததாகவும், அந்தச் சமயத்தில் தன் அம்மாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய பணம் இல்லாமல் தன் தந்தை தவித்தபோது தந்தையின் நண்பர் மற்றும் இயக்குநரான சேத்தன் ஆனந்த் என்பவர்தான் 400 ரூபாய் கொடுத்து உதவியதாகவும் கூறினார்.
“நான் பிறந்தபோது மருத்துவமனையில் இருந்து என் அம்மாவை (ஷெஹ்லா கான்) டிஸ்சார்ஜ் செய்ய என் அப்பாவிடம் பணம் இல்லை. என் அம்மா அழுவதைப் பார்க்க முடியாமல் என் தந்தை அங்கு வரவில்லை. அம்மாவிடம் முகத்தைக் காட்ட அவர் வெட்கப்பட்டார். என் தந்தை ஒரு மூலையில் உட்கார்ந்து அழுவதைப் பார்த்த அவரது நண்பர் மற்றும் இயக்குநர் சேத்தன் ஆனந்த் (Chetan Anand) 400 ரூபாய்க் கொடுத்து உதவினார். பின்னர் நாங்கள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்ததாக என்னிடம் சொன்னார்கள்” என்று உருக்கமாகக் கூறினார் ஷதாப் கான்.