நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளின் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

பந்திரா,
மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர்.  713 பேர் காயமடைந்தனர்.
இதில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டுக்கு தப்பியோடி விட்டார்.  அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது.  தேடப்படும் பட்டியலிலும் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை கடந்த பிப்ரவரியில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது.  இந்நிலையில், தாவூத்தின் நெருங்கிய கூட்டாளிகளின் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை இன்று அதிரடி சோதனை நடத்தியது.
இதன்படி, மும்பையின் பந்திரா, நாக்பாத, போரிவலி, கொரேகாவன், பரெல், சாந்தகுரூஸ் உள்ளிட்ட இடங்களில் குறிபார்த்து துப்பாக்கி சுடுவோர், போதை பொருள் கடத்தல்காரர்கள், ஹவாலா கும்பல், தாவூத் இப்ராகிமின் ரியல் எஸ்டேட் மேலாளர்கள் மற்றும் குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய பிற முக்கிய பிரமுகர்களின் இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
தாவூத் இப்ராகிமின் டி-கம்பெனி என்ற பெயரிலான அமைப்பு, இந்தியாவில் அமைதி நிலவுவதற்கு எதிரான நோக்கங்களுடன் செயல்படுகிறது என்றும், அந்த அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் உள்ள பலர் வெளிநாடுகளில் வசித்து கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் வந்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு கடந்த பிப்ரவரியில் வழக்கு பதிவு செய்திருந்தது.
இதனை தொடர்ந்து முதன்முறையாக, அந்த வழக்கு விசாரணையை கையிலெடுத்துள்ள முகமை, பெரிய அளவிலான இந்த சோதனையை இன்று நடத்தியுள்ளது.  இதுதவிர, பயங்கரவாத ஒழிப்பு பிரிவானது, இப்ராகிமின் கூட்டாளிகளான சோட்டா ஷகீல், ஜாவித் சிக்னா, டைகர் மேனன், இக்பால் மிர்ச்சி, சகோதரி ஹசீனா பார்க்கர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த உள்ளது.
இதனை மத்திய உள்விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாதுகாப்புடன் இருந்து கொண்டு தாவூத் இப்ராகிம் செயல்படுத்தி வரும் டி-கம்பெனியில் உள்ள உறுப்பினர்களின் குற்ற மற்றும் பயங்கரவாத செயல்கள் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.