நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரத்தில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. நேற்று முன் தினம் இரவுமுதல் மாவட்டத்தின் பலப் பகுதிகளில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தாலும், ஊட்டி, கல்லட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது.
இரவு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே இடி மின்னலுடன் பெருமழை பெய்திருந்தாலும், கல்லட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் பல கிராமங்களில் பெரிய அளவிலான மண் அரிப்பு ஏற்பட்டது. ஆர்ப்பரித்து ஓடிய வெள்ள நீரில் பாறைகள் அடித்து வரப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் குவிந்துக் கிடக்கின்றன. சில வீடுகளுக்குள் மழை நீருடன் அடித்து வரப்பட்ட மண்ணும் கற்களும் சூழ்ந்துள்ளன. அகற்றும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீரென கொட்டித் தீர்த்த பெருமழை பாதிப்பு குறித்து நம்மிடம் பேசிய உள்ளூர் மக்கள், “இரவு 10 மணி வாக்கில் பயங்கர இடி மின்னலுடன் மழை ஆரம்பித்தது. உடனடியாக மின் இணைப்பும் தடைப்பட்டது. மழை ஆரம்பித்த சில நிமிடங்களில் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அழகர்மலை, சோலாடா, ஆல்காடு, தட்டனேரி, அம்மனாடு, காந்திநகர் உள்ளிட்டப் பகுதிகளில் 50-க்கும் அதிகமான வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் இருந்த நடைபாதை முழுமையாக அடித்து செல்லப்பட்டது. கால்வாய்களிலும் பாறைகள் குவிந்தன.
குடிநீர் குழாய்களும்… கழிவுநீர் கால்வாய்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலை காய்கறிப் பயிர்களும் சேதம் அடைந்தன. மழை இன்னும் சில மணி நேரம் பெய்திருந்தால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு, பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து மழை பாதிப்புகளை உடனடியாக சீரமைத்துக் கொடுக்க வேண்டும்” என்றனர்.
இது குறித்து நீலகிரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “உல்லத்தி ஊராட்சித் தலைவர், கவுன்சிலர் ஆகியோர் பார்வையிட்டு மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்தனர். கால்வாயில் குவிந்திருந்த பாறைகள், மண் குவியல்களை இயந்திரங்கள் உதவியுடன் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வீடுகளுக்குள் புகுந்த மழை நீரும் வெளியேற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் சில அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மண் அரிப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்” என்றனர்.